புது தில்லி, ஜூலை 14: நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.44 சதவீதமாக உயர்ந்தது. எரிபொருள், உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணவீக்கம் 10.25 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பணவீக்கத்தின் அளவு குறைவாகவே உள்ளது. ஆனாலும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கும் அளவுக்கு அது குறையவில்லை.
டீசல், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை கடந்த மே 24-ம் தேதி உயர்த்தப்பட்டது. இதன் பாதிப்பாக பெரும்பாலான பொருள்களின் விலைகள் உயர்ந்தன.
பணவீக்க அளவில் எரிபொருள், மின்சாரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது இவ்விரு துறைகளின் பங்களிப்பு 12.85 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.17 சதவீதமும், டீசல் விலை 6.58 சதவீதமும், பெட்ரோல் விலை 30.61 சதவீதமும் உயர்ந்துள்ளது.
உற்பத்திப் பொருள்களின் விலை 12.22 சதவீதம் உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் உற்பத்திப் பொருள்களின் விலை 11.30 சதவீதமாக இருந்தது.
இம்மாதம் 26-ம் தேதி ரிசர்வ் வங்கியின் முதல் காலாண்டு நிதி ஆய்வு நடைபெற உள்ளது. அப்போது வங்கி வட்டி விகிதம் உயர்த்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பணவீக்கத்தின் அளவு 9 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்று ஏற்கெனவே ஆர்பிஐ கணித்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய மாதத்தை விட பணவீக்கம் உயர்ந்திருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
2010-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 10 முறை உயர்த்தியுள்ளது. எதிர்வரும் ஆய்வுக் கூட்டத்திலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம். வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது பொருளாதார வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இருப்பினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது என்று பிரணாப் குறிப்பிட்டார்.
உணவுப் பணவீக்கமும் உயர்வு: ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 8.31 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக குறைந்து வந்த உணவுப் பணவீக்கம் இப்போது உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 7.61 சதவீதமாக இருந்தது. பழங்கள் விலை 13.54 சதவீதமும், காய்கறிகளின் விலை 12.39 சதவீதமும் உயர்ந்திருந்தது. முட்டை, இறைச்சி, மீன் உணவு ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.95 சதவீதம் உயர்ந்திருந்தது.