புது தில்லி, ஜூலை 14: பரீதாபாத்தில் சாலைகளைத் செப்பனிடும் பணிகளைச் செய்யவில்லை. எனவே, மழைக்காலம் முடியும்வரை அப்பகுதிமக்கள் மோசமான சாலைகளிலேயே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
இந்த நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கும் முன்பே சாலைகளைச் செப்பனிடுவதாக பரீதாபாத் மாநகராட்சி உறுதிகூறியிருந்தது.
ஆனால், பணிகள் தொடங்கும் முன்பே பருவமழை முன்கூட்டியே பெய்யத்தொடங்கிவிட்டது. இதனால் பல சாலைகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. அந்தச் சாலைகளில் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெறுவதால் அவை சேறும், சகதியுமாக உள்ளன. இனி பருவமழைக்காலம் முடிந்தபின்னர்தான் அந்தச் சாலைகளைச் செப்பனிட முடியும்.மழைநீரால் சூழப்பட்டுள்ள சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால், மின்விநியோகம் பல மணி நேரம் தடைபடுகிறது. அந்தச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நகரின் பல சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சேறும் சகதியுமாக உள்ளது.
இதை கடக்கும் பாதசாரிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சாலைகளில் தேங்கும் மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற பம்புகள் அமைத்திருப்பதாக மாநகராட்சி கூறுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியும் என்கிறார் செக்டார் 19-ல் வசிக்கும் ரத்தன்லால் சர்மா.
சேறும் சகதியுமான சாலைகளில் கீழே விழுந்துவிடாமல் நடந்துசெல்வது மிகவும் சிரமமான செயலாக உள்ளது. மழை அதிகம் பெய்யும் நாள்களில் சாலைகளில் எந்தெந்த இடங்களில் பாதாளச்சாக்கடை மூடிகள் திறந்தே இருக்கும் என்பதை வாகனங்களில் செல்வோர் யூகிக்க முடியாது. இந்த சமயங்களில் பயணம் பதிப்பாக இருக்காது எனக் கருதப்படுகிறது.
சாலைகளில் குழிதோண்டி வேலை செய்யும்போது மாநகராட்சியினர் போர்டுகள் வைப்பதில்லை. எனவே, எந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது எனத் தெரியாமல் பாதசாரிகள் பயந்து பயந்து கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
பரீதாபாத் மாநகராட்சி ஆணையர் டி.சுரேஷ் கூறுகையில், பழைய காலத்தில் அமைக்கப்பட்ட சாக்கடைகள்தான் இப்போதும் உள்ளன, எனவே நகர் முழுவதுமே மழைக்காலத்தில் சாக்கடைகள் அடைத்துக்கொள்கின்றன, ஆழ்குழாய்கள் அமைத்து இந்த பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்கிறோம் என்றார்.