புது தில்லி, ஜூலை 14: தில்லி மாநகராட்சியின் அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மேயர் ரஜினி அபி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையருக்கு வியாழக்கிழமை அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து அலுவலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகே 100 மீட்டருக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும். மாணவர்கள் மத்தியில் புகையிலைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்துக்குள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் அளிக்க அந்தந்த துணை ஆணையாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை, குட்காவிற்கு தடை, புகையிலைக் குறித்த விழிப்புணர்வு போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை "வாய்ஸஸ் ஆப் விக்டீம்ஸ்' அமைப்பினர் சிவிக் சென்டரில் மேயரிடம் அளித்தனர். இதன் பிறகு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
புகையிலையினால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 60 லட்சம் பேரும், இந்தியாவில் 10 லட்சம் பேரும் மரணமடைகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.