புது தில்லி, ஜூலை 14: லாரியில் சென்றவரிடம் விற்பனை வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கார், லாரி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன.
தில்லி வாசீர்பூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹோசல்லா பிரசாத். இவர், இம் மாதம் 1-ம் தேதி சில்வர் பாத்திரங்களுக்கான மூலப்பொருள் மூட்டைகளை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு தில்லி ஆசாத் மார்க்கெட்டில் இருந்து ஹரியாணா மாநிலம் சோனிபட் குண்ட்லி தொழிற்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை காரில் வந்த சிலர் வழிமறித்து நிறுத்தினர். தங்களை விற்பனை வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு லாரியில் சட்டவிரோதமாகப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதாகக் கூறியுள்ளனர். மேலும், ஹோசல்லாவை மிரட்டி காரில் ஏற்றி ஓர் இடத்துக்கு கடத்திச் சென்றனர். அங்கு அவரிடம் இருந்து பணம், செல்போனை பறித்துக்கொண்டனர். லாரியையும் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அலிப்பூர் காவல் நிலையத்தில் ஹோசல்லா புகார் செய்தார்.
போலீஸôர் அலிப்பூர் பகுதி நெடுஞ்சாலையில் ஜூலை 13-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாத்திரங்களுடன் கடத்தி வரப்பட்ட லாரியும், ஹோசல்லாவிடம்
கொள்ளையில் ஈடுபட்ட தில்லியைச் சேர்ந்த ராஜேஷ் (50), ராஜ்குமார் (45), ராஜீவ் நகரைச் சேர்ந்த வினோத் குமார் (23), சுக்பீர் நகர் பர்தீப் (23) ஆகியோரும் பிடிபட்டனர். அவர்களது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொள்ளையிடப்பட்ட பொருள்களை வாங்கியதாக ராம் கிஷோர், சர்வேஷ், சந்தர் பாலி, ஷியாம் சுந்தர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன.