புது தில்லி, ஜூலை 14: 2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிஐ
விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக குழுவினர், சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங்கை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். 2ஜி அலைக்கற்றை ஓதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். நிதியமைச்சகமும், தொலைத் தொடர்பு துறையும் இணைந்து அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டிருப்பது பாஜகவுக்குத் தெரியவந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மட்டும் சிபிஐ விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ப.சிதம்பரத்திடம் சிபிஐ இதுவரை ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
2ஜி விவகாரத்தில் ப. சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் ஏற்கெனவே வலியுறுத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.