புது தில்லி, ஜூலை 23: அமெரிக்காவின் ஏஜிசிஓ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் சென்னை தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளார்.
டிராக்டர் அண்ட் ஃபார்ம் எக்யூப்மெண்ட் (டாஃபே) நிறுவனத்தின் தலைவராக உள்ளவர் மல்லிகா ஸ்ரீனிவாசன். இவர் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவி.
காலஞ்சென்ற தொழிலதிபர் சிவசைலத்தின் மூத்த புதல்வியான இவர், தந்தையின் காலத்திலேயே டாஃபே நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். இப்போது நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஏஜிசிஓ கார்ப்பரேஷன் நிறுவனம் வேளாண் சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் டாஃபே நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் டாஃபே நிறுவன டிராக்டர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கு இவை மாúஸ பெர்கூசன் என்ற பிராண்டுப் பெயரில் விற்பனை செய்யும் பணியை ஏஜிசிஓ மேற்கொண்டுள்ளது. இரு நிறுவனங்களும் இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் முறை உறவு உள்ளது. டாஃபே நிறுவனம் கடந்த ஆண்டு 1,17 லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகள் 47 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இயக்குநர் குழுமத்தில் மல்லிகா ஸ்ரீனிவாசன் சேர்க்கப்பட்டதன் மூலம் அவரது அனுபவமும் டாஃபே நிறுவனத்தில் அவரது பங்களிப்பும் ஏஜிசிஓ நிறுவனத்துக்கும் கிடைக்கும்.
இதன் மூலம் புதிய சந்தைவாய்ப்புகள், புதிய தயாரிப்புகள் உருவாக வழி ஏற்பட்டுள்ளது என்று ஏஜிசிஓ நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் ரிச்சென்ஹேகன் தெரிவித்தார்.