ஒரு மணி நேரம் முன்னதாக வர ரயில் பயணிகளுக்கு அறிவுரை

புது தில்லி, ஜூலை 23: ரயில் பயணத்தின்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும் என வடக்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. விமானப் பயணிகளைப் போல ரயில் பயணிகளையும் மெயின் பிளாட்
Published on
Updated on
2 min read

புது தில்லி, ஜூலை 23: ரயில் பயணத்தின்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும் என வடக்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

விமானப் பயணிகளைப் போல ரயில் பயணிகளையும் மெயின் பிளாட்பாரங்களுக்குள் நுழையும் முன்பாக முழுமையாகச் சோதனையிட வேண்டும் என ரயில்வேயை, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. எனவே, விமானப் பயணிகளைப்போல சோதனையிட அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.

ரயில்வே போலீஸôரின் ஒத்துழைப்புடன் புது தில்லி ரயில் நிலையத்தில் இரண்டு பக்க நுழைவு வாயில்களிலும் அதாவது பாகர்கஞ்ச் நுழைவு வாயிலில் 3, அஜ்மீரிகேட் நுழைவு வாயிலில் 3 என மொத்தம் 6 ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர ஒவ்வொரு பக்கத்திலும் தலா ஒரு ஸ்கேனர் தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்.

கூட்டநெரிசல் காரணமாக ரயில் புறப்படுவதற்கு சுமார் 1 மணி நேரத்துக்கு முன்கூட்டியே ரயில் நிலையத்திற்கு வந்துவிடுவது உசிதமானது என வடக்கு ரயில்வே சிபிஆர்ஓவான எஸ்.கே.சர்மா தெரிவித்துள்ளார்.

புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து தினமும் சராசரியாக 3 லட்சம் வெளியூர் பயணிகள் ரயில் ஏறுகிறார்கள். ஆனால், இவர்களைச் சோதனையிட போதிய எண்ணிக்கையில் கருவிகள் இல்லை. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் விமானப் பயணிகள் சோதனையிடப்படுகிறார்கள். அங்கு 50 எக்ஸ்ரே ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், புது தில்லி ரயில் நிலையத்தில் 6 எக்ஸ்ரே ஸ்கேனர்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றின் மூலமும் நாள் ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரயில் பயணிகள் சோதனையிடப்படுகின்றனர் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இது ஒரு தொடக்கம்தான். காலப்போக்கில் கூடுதலாக ஸ்கேனர் கருவிகள் தருவிக்கப்பட்டுவிடும். சரக்குகளைக் கையாளும்பணி முழுவதும் பாகர்கஞ்ச் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பழுதான எக்ஸ்ரே ஸ்கேனர்கள் பழுதுநீக்கப்பட்டுவருகின்றன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புது தில்லி ரயில் நிலையத்துக்கு தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரைதான் அதிக கூட்டம் வருகிறது.

அப்போதுதான் தில்லியிலிருந்து கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களுக்கான பெரும்பாலான ரயில்கள் புறப்பட்டுச் செல்கின்றன.

சீல்தா ராஜதானி எக்ஸ்பிரஸில் ஏறுவதற்காக 2 சூட்கேஸ்களுடன் அஜ்மீர்கேட் பகுதியில் ஸ்கேனரில் சோதனையிடுவதற்காக காத்திருந்த அபிஷேக் பானர்ஜி என்பவரிடம் விசாரித்தபோது, 25 நிமிஷங்களாகக் காத்திருக்கிறேன். பாதுகாப்புச் சோதனை எப்போது முடியும் எனத் தெரியவில்லை என அங்கலாய்த்தார்.

மற்ற ரயில் நிலையங்களிலும் ஸ்கேனர் சோதனையிடல் நடைமுறையை அமலாக்க வடக்கு ரயில்வே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பதிவு செய்யாத லக்கேஜ்களை எடுத்தும்செல்லும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ரயில்வே போலீஸôரின் ஒத்துழைப்புடன் திடீர் சோதனைகளை வடக்கு ரயில்வேயின் வர்த்தகப்பிரிவு மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் 18-ம் தேதி இதுபோல நடத்தப்பட்ட சோதனையின்போது அமிருதசரஸ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான  பதிவு செய்யாத சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, இம்மாதம் 20-ம் தேதி தில்லி-சகரன்பூர் பயணிகள் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் 20 குவிண்டால் எடையுள்ள 121 சிப்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதிவு செய்யாமல் பார்சல்கள் எடுத்துச்செல்ல முயன்றதாக புது தில்லி ரயில்நிலையத்தில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

முறையான டிக்கெட் இல்லாமல் சிர்சா-திலக் பிரிட்ஜ் ஹரியாணா எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததாக சக்குர்பஸ்தி ரயில் நிலையத்தில் 22 பயணிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை பிரதீப் குமார் எண்ற போலி டிக்கெட் பரிசோதகர் பிடிபட்டார்.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பு, சோதனைப் பணிகளை அதிகரிக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.