திருக்கோவிலூர், ஜூலை 23: திருக்கோவிலூர் பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை, பேருராட்சிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சீரான மின் விநியோகம் செய்வதற்காக கடந்த 1986-ம் ஆண்டு திருக்கோவிலூரில் 110 கி.வா. துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
நகர விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், விவசாய உற்பத்தி போன்றவற்றுக்கு மின் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த மின் நிலையத்தால் பயனில்லை என்பதை மின்சார வாரியம் நன்கு அறியும்.
இருந்தும் சீரான மின் விநியோகம் செய்யும் வகையில் ஜி.அரியூர், மணலூர்பேட்டையில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மின்வாரிய அதிகாரிகள் எடுக்கவில்லை.
கூடுதல் மின் அழுத்தம் காரணமாக விவசாயம், வணிகம், தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, இரவு நேரங்களில் வீடு, தெருக்களில் மின் விளக்குகள் எரியாததால் மாணவர்கள் படிக்க முடியவில்லை.
இதுபோல சொல்ல முடியாத பல இடர்பாடுகளுக்கு மத்தியில் பொதுமக்கள் காலத்தை கடத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற, ஜி.அரியூர், மணலூர்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை உடன் தொடங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்: திருக்கோவிலூர் பகுதியில் சீரான மின்சாரம் கிடைப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியும், கிராமப்புறங்களில் டிரான்ஃபார்மர் பழுது ஏற்பட்டால், மாற்று மின்மாற்றி பொருத்திட மாதக்கணக்காக இழுத்தடிப்பு செய்யும் மின்வாரிய அலுவலர்களின் செயலை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வரும் 29-ம் தேதி திருக்கோவிலூர் மின்சார வாரிய அலுவலகம் முன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.