தில்லி பல்கலை.யில் செமஸ்டர் அமல்

புது தில்லி,  ஜூலை  23: தில்லி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகளில் செமஸ்டர் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் அனைத்துக் கல்லூரிகளும் கடந்த
Published on
Updated on
2 min read

புது தில்லி,  ஜூலை  23: தில்லி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகளில் செமஸ்டர் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் அனைத்துக் கல்லூரிகளும் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டன. முதலாண்டு மாணவர்களுக்கு முதல்முறையாக இந்த புதிய பாட முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செமஸ்டர் முறைக்கு கல்லூரியில் புதிதாக காலடி எடுத்துவைத்திருக்கும் புதிய தலைமுறையினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

செமஸ்டர் பாடத் திட்ட முறையை அமல்படுத்துவதற்கு கல்லூரி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கடந்த ஓராண்டாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

"முதல் செமஸ்டர் முடியும்போது, டிசம்பர் மாத இறுதியில் பல்கலைக்கழகத் தேர்வு எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அடுத்த செமஸ்டரில் இன்னும் நன்றாகத் தேர்வு எழுதும் வாய்ப்பும் எங்களுக்கு உள்ளது. இந்த வசதி எங்களின் மூத்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை' என்றார் ஹிந்து கல்லூரியில் முதலாண்டு பட்டப்படிப்பு பயிலும் அனுஜா.

"செமஸ்டர் பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது, காலத்தின் முக்கியம் அறியப்படுகிறது. ஒரு கல்வி ஆண்டில் இரு முறை பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுத வேண்டியிருப்பதால், ஆரம்பத்தில் இருந்தே பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டியிருக்கும். அத்துடன் இரு செமஸ்டர் தேர்வுகளுமே முக்கியம்' என்று வெங்கடேஸ்வரா கல்லூரி முதலாண்டு பட்டப்படிப்பு மாணவி கனிகா கூறினார்.

செமஸ்டர் பாடத் திட்ட முறையை வெற்றிகரமாக செயல்படுத்தும்விதமாக, அதன் பின்னணி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் தில்லி பல்கலைக்கழகத் துணை வேந்தர் தினேஷ் சிங். பல்வேறு கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுடன் செமஸ்டர் முறை குறித்து கலந்துரையாடி வருகிறார்.

"கல்லூரியின் புத்தாக்கப் பயிற்சியின்போது, இந்த புதிய பாட முறையை முதலாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். இரு செமஸ்டர் தொடர்பாக முழு கால அட்டவணையும் அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன' என்று லேடி ஸ்ரீ ராம் கல்லூரிப் பேராசிரியை மைதிலி மிஸ்ரா கூறினார்.

படிப்பில் கவனம் செலுத்துவதற்கு நேரத்தை நன்கு திட்டமிட்டு செலவிட வேண்டும் என்றும் பாடங்களுடன் பல்வேறு தனித் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களை துணை வேந்தர் தினேஷ் சிங் வலியுறுத்தி வருகிறார்.

ஆசிரியர்களிடம் இருந்து உதவிகள் கேட்பதற்கு தயங்கக்கூடாது என்றும் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காலம் கடந்துசெல்லச் செல்ல, துணை வேந்தருக்கும், கல்லூரி ஆசிரியர்களுக்கும் இடையே நிலவி வரும் பிரச்னைகளுக்கும் வழி பிறக்கும். கல்லூரி ஆசிரியர்களும் செமஸ்டர் முறையை மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டு வருகின்றனர். ஆனால் புதிய முறை குறித்து அவர்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவைதான் அவர்களுக்கு கவலை அளித்து வருகின்றன.

"செமஸ்டர் முறையை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அமல்படுத்தப்படும் முறையைத்தான் நாங்கள் குறைகூறி வருகிறோம். கல்லூரி ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெறாமலேயே தடாலடியாக செமஸ்டர் முறை அறிமுகப்பட்டுள்ளது.

பாடத்திட்டம், ஒரு பாடத்தைக் கற்பிக்க எடுத்துக்கொள்ளப்படும் கால அளவு, பல்கலை. தேர்வுகள் என பல அம்சங்களை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. எனினும் புதிய முறையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துப்போகும் வழிமுறைகளை இப்போதில் இருந்து நாம் காண வேண்டும்' என்று இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரிப் பேராசிரியர் சுமன் அரோரா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.