புது தில்லி, ஜூலை 23: வேதங்களுக்கான அறிவியல், ஆய்வு நிறுவனம் நடத்தும் 2 நாள் தேசிய கருத்தரங்கு இம் மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில் கி.மு. 2 ஆயிரத்துக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறிவியல்பூர்வமாக தேதிவாரியாக வரிசைப்படுத்துதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.
இந்த கருத்தரங்கம் இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் சம்ஸ்கிருத கையெழுத்துப் படிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கோள்கள் பற்றிய குறிப்புகளை கோளரங்க மென்பொருள் உதவி மூலம் தேதிவாரி முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்படும்.
இரண்டாம் பகுதியில் தொல்பொருள் ஆய்வு, மானுடவியல், புவியியல், கடலியல் போன்ற துறைகளோடு சம்ஸ்கிருத படிகளில் குறிப்பிட்டுள்ள தேதிகளை ஒப்புநோக்குதல் ஆகியன மேற்கொள்ளப்படும்.
இந்த கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றுகிறார்.
பண்டைக் கால வரலாறு குறித்து கடந்த 20 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளை அறிவியல்ரீதியாக தீர்மானிப்பதற்கு, இம்மாதிரியான கருத்தரங்கு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.