புது தில்லி, ஜூலை 30: தில்லியில் அதிகமான மரக்கன்றுகளை நடும் சமூக அமைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
தில்லியை மேலும் பசுமையான மாநிலமாக மற்றும் வகையில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த ஆண்டு 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஷீலா தீட்சித் அறிவித்தார்.தில்லி காலி பாரி பகுதியில் உள்ள பூங்காவில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று நட்டு, இந்தத் திட்டத்தை அவரே சில நாள்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இது பற்றி சனிக்கிழமை அவர் பேசியது:
தில்லியிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஏராளமான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கெனவே இங்குள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, தில்லிவாசிகள் ஆர்வத்துடன் அதிகமான மரங்களை நட வேண்டும். விளையாட்டு இடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூங்காக்களிலும், பள்ளி வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. தில்லியைப் பசுமையாக்கும் முயற்சியில் அதிகமான மரக்கன்றுகளை நடும் அமைப்புக்குப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்