புது தில்லி, ஜூலை 29: ரோகிணி செக்டர் 8 சி7 பாக்கெட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்தின் (ஐஜிஎல்) குழாய்ப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
ஐஜிஎல் நிறுவனத்தின் குழாய்ப் பணிக்காக தில்லி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், குழாய்ப் பதிக்கும் பணி முடிவுற்ற பிறகும்கூட அதை மூடும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இரு முறை புகார் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதுபோன்ற பள்ளங்கள் பல இடங்களில் இருப்பதால் பொதுமக்கள் விபத்தை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர்.
மாநகராட்சிக்கும், கவுன்சிலர்களுக்கும் இது தொடர்பாக பலமுறை புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மேற்கொள்ளவில்லை என்பதே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், பள்ளம் உள்ள இடத்தை அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் ஆதங்கப்படுகன்றனர்.இது குறித்து குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ஆர்.கே. குரோவர் கூறியது:
இப் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கவுன்சிலர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் ஏதும் நடவடிக்கை இல்லை. இது குறித்து ஐஜிஎல் அதிகாரிகளிடமும் பேசிவிட்டோம். குழாய்ப் பதிப்புப் பணிக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிக்கான நிதியை ஏற்கெனவே தில்லி மாநகராட்சியிடம் அளித்துவிட்டதாக கூறுகின்றனர் என்றார்.
இதுகுறித்து ஐஜிஎல் நிறுவனத்தின் பொது மேலாளர் ஹேமந்த் சிங் கூறியதாவது:
இந்த விஷயத்தில் எங்கள் தரப்பில் ஏதும் செய்வதற்கில்லை. பணி முடிக்கப்பட்டுவிட்டது. சாலையைத் தோண்டுவதற்கு முன்பு மாநகராட்சியின் சாலைப் பதிவு வெட்டுக் கொள்கையின்படி தில்லி மாநகராட்சிக்கு ஒரு தொகையை கொடுக்க வேண்டும். கட்டுமானப் பணி முடிந்த பிறகு சாலைச் சீரமைப்புப் பணியை மேற்கொள்வதற்காகத்தான் இந்தத் தொகை கொடுக்கப்படுகிறது என்றார்.
எம்சிடி (ரோகிணி) செயற்பொறியாளர் ஆர்.கே.சர்மா கூறியதாவது:
இப் பிரச்னை குறித்து எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. ஆனால், இதுபற்றி இப்போது தெரிய வந்துள்ளதால், இவ்விஷயத்தில் உரிய அக்கறை காட்டப்படும் என்றார்.