புது தில்லி, ஜூலை 30: தில்லியில் அண்மையில் பெய்த மழையால், நகரத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல், டைஃபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோர் வெளிப்புற நோயளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வருகை தருவோரில் மூன்றில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சலோ, டைபாய்டோ உள்ளது. இதற்கு காரணம் சுகாதாரமற்ற உணவுகளை உள்கொள்வதே என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவ மழைக்காலத்தில் டைபாய்டு காய்ச்சல் பரவ அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவு ஆகியவையே காரணம். உணவு உட்கொள்ளும் முன் கைகளை நன்றாக சோப்பு நீரில் கழுவ வேண்டும்.
சாலையோர உணவகங்களில் சாப்பிடாமல், வீட்டில் சமைக்கும் உணவுகளை உள்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வைரஸ், டைபாய்டு காய்ச்சலுக்கு டாக்டர்களின் ஆலோனைகள் இன்றி மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.