புது தில்லி, ஜூலை 30: தலைநகர் தில்லியில் உள்ள வடஇந்திய திருச்சபை பேராலயத்தில் தமிழர்களுக்காக தனியாக தமிழில் ஆராதனைகள் நடத்த வேண்டும் என்று ஆங்கிலேயர்களிடம் போராடி வெற்றிப் பெற்றுள்ளார் தமிழ்ப் பெண்மணி பி. தானியல்.
அவரது முயற்சியால் இரட்சண்ய போராலயத்தில் 68 ஆண்டுகளாக தமிழில் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் தமிழ் ஆராதனைகளில் 450- க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குடும்பத்துடன் பங்கேற்கின்றனர்.
கதீட்ரல் பேராலயம்: குடியரசுத் தலைவர் மாளிகை அருகே பிரமாண்டமாய் அமைந்துள்ளது இரட்சண்ய பேராலயம். இந்தப் பேராலயத்தை அமைக்க 1927 பிப்ரவரி 23- ம் தேதி வைஸ்ராய் இர்வின் அடிக்கல் நாட்டினார்.
போராலயத்தைக் கட்டுவதற்கு ரூ. 50 ஆயிரம் ஆகும் என மதிப்பிடப்பட்டது. இதற்கான நிதியை வைஸ்ராய் இர்வின், பிரிட்டனிலிருந்து கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார். பேராலயத்தில் உள்ள அனைத்து புராதன ஓவியங்கள், மேஜைகள் ஆகியவற்றை பிரிட்டிஷ் மன்னர்கள் பரிசாக அளித்துள்ளனர்.
இப்போதைய குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்த வைஸ்ராய் இர்வின், இரட்சண்ய போராலயத்துக்கு வருவதற்கு ஏதுவாக நுழைவாயில் ஏற்படுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் 38- வது நுழைவாயிலுக்கு எதிரே பேராலயத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஆராதனை: 1931 ஜனவரி 18- ம் தேதி மக்களின் ஆராதனைக்காக இரட்சண்ய பேராலயம் திறக்கப்பட்டது. அப்போது முதலில் ஆங்கிலத்திலும், தமிழிலும், ஹிந்துஸ்தானியில் ஆராதனைகள் நடைபெற்றன. போராயர் பி. தாஸ் என்பவர் தமிழில் ஆராதனைகளை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழர்களின் பங்கேற்பு குறைவாக இருந்த காரணத்தால் தமிழ் ஆராதனைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் பர்மா நாட்டில் இருந்து தில்லிக்கு வந்த தமிழ்ப் பெண்ணான தானியல் ஆராதனைக்காக செயின்ட் தாமஸ் போராலயத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது ஹிந்துஸ்தானி சேவையில் மட்டும் ஆராதனைகள் நடைபெற்றன. தாய் மொழியில் கடவுளை ஆராதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தில்லியின் பேராயர் கேனான் முகர்ஜியை சந்தித்து தில்லி பேராலயத்தில் தமிழில் ஆராதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 5 பேருக்காக மட்டும் தமிழில் ஆராதனைகள் நடத்தப்படமாட்டாது என்று அவர் மறுத்துவிட்டார்.
தமிழ்ச் சேவையை அளிக்க வேண்டும் என்று பேராயரிடம் தானியல் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 50 தமிழர்களை அடுத்த ஆராதனைக் கூட்டத்துக்கு அழைத்து வந்தால் தமிழில் ஆராதனைகள் நடத்த அனுமதிப்பதாக தில்லி போராயர் முகர்ஜி வாக்குறுதியளித்தார்.
தனக்கு முன் வைக்கபட்ட சவாலில் எப்படியாது வெற்றிப் பெற வேண்டும் என்று மன உறுதியோடு தில்லி சாலைகளில் இறங்கினார் தானியல். சாலைகளில் செல்வோர், விடுதிகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் தமிழர்களைக் கண்டுபிடித்து தமிழ் ஆராதனைக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
1943 ஏப்ரல் 23-ம் தேதியன்று ஆராதனைக்காக இரண்டு லாரிகளில் தமிழர்கள் வந்து குவிந்தனர். தமிழர்களின் கூட்டத்தைக் கண்டு பிரமித்துப் போன தில்லி போராயர் அன்று முதல் தமிழில் ஆராதனைகள் நடத்த அனுமதியளித்தார். தமிழ் ஆராதனைகள் ஃபதேபூரில் உள்ள ஸ்டீபன்ஸ் பேராலயத்தில் தொடங்கியது. அதன் பின்னர் வட இந்திய திருச்சபை பேராலயத்துக்கு மாற்றப்பட்டு இன்றும் தமிழ் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி - 9:30 மணி வரை ஆங்கிலத்திலும், காலை 9:30 மணி - 11 மணி வரை தமிழ், 11 - 12:30 மணி வரை ஹிந்தியிலும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மூத்த உறுப்பினர் லக்ஷ்மி பைன்: கதீட்ரல் பேராலயத்தில் 1947 முதல் தமிழ் ஆராதனைகளில் லக்ஷ்மி பைன் என்பவர் தவறாமல் பங்கேற்று வருகிறார். அவர் கூறியது: ராணுவத்தில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு தில்லியில் தமிழில் ஆராதனைகள் நடைபெறுவது தெரியாதால் பலர் ஆங்கில ஆராதனைகளில் பங்கேற்று வந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் ஆராதனைகள் கேட்டால் தாய் மொழியை மறக்கமாட்டார்கள் என்பதால் அரசு பணிகளில் இருந்த அனைவரும் இரட்சண்ய போராலயத்தில் தவறாமல் தமிழ் ஆராதனைகளில் பங்கேற்றார்கள்.
கென்னடி: மாநிலங்களவை செயலகத்தில் அரசுப் பணி கிடைத்தவுடன் தில்லிக்கு வந்தேன். 20 ஆண்டுகளாக தமிழ் ஆராதனைகளில் பங்கேற்று வருகிறேன். பெற்றோர்கள் ஆராதனைகளில் பங்கேற்கும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு தமிழில் ஞாயிறு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் தமிழக பேராலயத்தில் இருப்பதைப் போன்ற சூழ்நிலை எங்களுக்கு ஏற்படுகிறது.
போராயர் கிறிஸ்டோபர் ராஜ்: இந்தப் பேராலயத்தில் 10 ஆண்டுகளாக தமிழ் ஆராதனைகளை நடத்தி வருகிறேன். இதில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், இளைஞர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இந்தப் பேராலயத்துக்கு வரும் பக்தர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து தில்லிலேயே தங்கிவிடுவார்கள். இங்கு தமிழகத்தில் இருந்து 150 பேராயர்கள் பங்கேற்கும் கூட்டமும் ஆண்டுதோறும் நடைபெறும் என்று தெரிவித்தார். தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் படித்த இவர், இப்போது ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் டீனாக பணிபுரிந்து வருகிறார்.
பொது நலச் சேவை: தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை படிக்க வைப்பதாக பேராலயத்தின் நிர்வாகத் தலைவர் ராஜா சிங் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள ஆனந்த் கிராம் தொழு நோய் புனரமைப்பு முகாமில் இருந்து ஆண்டு தோறும் 30 குழந்தைகளைத் தேர்ந்தெடுப்போம். தமிழ்க் குடும்பங்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தில்லியில் உள்ள முன்னணி பள்ளிகளில் பேராலயத்தின் முகவரியுடன் விடுதிகளில் சேர்க்கப்பட்டு படிக்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் படிக்க விரும்பும் உயர் கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக பேராலய நிர்வாகம் ஆண்டுதோறும் ரூ. 45 லட்சம் செலவிடுகிறது. இத்திட்டத்தில் 180 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்போது மாணவர்கள் தொழில்நுட்பம், மேலாண்மை ஆகிய படிப்புகளை படித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.