புது தில்லி, ஜூலை 30: தில்லி இந்தர்புரி ஜெ.ஜெ. காலனி, மாநகராட்சி தமிழ்வழி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆர்.வி.முத்துராமலிங்கம் பணி ஓய்வு பெறுவதையொட்டி அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
தில்லி மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்வி துணை இயக்குநர் (கரோல் பாக் மண்டலம்) விஜயலட்சுமி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ""ஆர்.வி. முத்துராமலிங்கம் ஒரு நல்ல பணியாளர் மட்டுமன்றி, நிறைய குழந்தைகளின் படிப்புக்காக தானே முயற்சி செய்து புத்தகங்களை வாங்கித் தந்தவர். அவரது பணி ஓய்வுக்குப் பிறகு குடும்பத்தினர் அவரை ஊக்குவிக்க வேண்டும்'' என்றார். பள்ளித் துணை ஆய்வாளர் ஜகதீஷ் பிரகாஷ் முன்னிலை வகித்துப் பாராட்டினார்.
வழக்குரைஞர் பி.நந்தகுமார், முன்னாள் தலைமையாசிரியர் டி.வி.எஸ். பாண்டியன், போக்குவரத்து அலுவலக வணிக வாகன ஆய்வாளர் ராமநாதன், மருந்து ஆய்வாளர் அறிவழகன், விஞ்ஞானி அருண் விஜய்குமார், கே.வி.பெருமாள், ஓய்வுபெற்ற தலைமையாசிரியை ஆனந்தி உள்ளிட்டோர் பேசினர். ரோகிணி மண்டலத்தில் வசிர்பூர், சக்கூர்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.இந்தர்புரி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் கமிட்டித் தலைவர் பாலையா தேவர் உள்பட உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஏற்புரையாற்றிய ஆசிரியர் முத்துராமலிங்கம், ""ஆசிரியப் பணியை அறப்பணியாகக் கருதி வேலை செய்தேன். தில்லி தமிழ்க் கல்விக் கழக முன்னாள் செயலராகவும், தமிழ்ச் சங்கத்தில் இருமுறை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன். பணி ஓய்வுக்குப்
பிறகும் எனது சமூகப் பணி தொடரும்'' என்றார்.