Enable Javscript for better performance
ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் கவலை தீர்க்கும் \\\"கவ்வாலி\\\' இசைப்பாடல்- Dinamani

சுடச்சுட

  

  ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் கவலை தீர்க்கும் "கவ்வாலி' இசைப்பாடல்

  By ஆ. சர்ப்ராஸ்  |   Published on : 19th September 2012 09:44 PM  |   அ+அ அ-   |    |  

  புது தில்லி, ஜூலை 27: ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் பாடப்படும் "கவ்வாலி' இசையைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் தர்காவில் குவிகின்றனர்.

   கவ்வாலி இசையை கேட்பதால் மனதுக்குள் அமைதி ஏற்படுவத இங்கு வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

   அல்லாஹ் மற்றும் இறைவனின் தூதர்களான நபிக்களை புகழ்ந்து பாடும் இறைப் பாடல்கள் "ஷூஃபி கவ்வாலி' என்று அழைக்கப்படுகிறது.

   இந்த வகையான பாடல்கள் தெற்கு ஆசியாவில் உள்ள தர்காக்களில் மிகவும் பிரபலமானபாடப்படுகிறது. தில்லி, அஜ்மீர் போன்ற பகுதிகளில் இந்த வகைப் பாடல்கள் பாரம்பரியமாகப் பாடப்பட்டு வருகிறது.

   இதேபோல் பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் கவ்வாலி பாடல்கள் மிகவும் பிரபலம். தில்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் வியாழக்கிழமை மாலையில் ஷூஃபி கவ்வாலி பாடல்கள் பாடப்படுகின்றன.

   தர்காவில் பிரதான வாயிலில் நுழையும் போதே நமது காதுகளுக்கு இனிமையாக மெல்லிய இசை கேட்கிறது.

   அங்கு அமைந்துள்ள குளத்தையும் இரு புறங்களிலும் அமைந்துள்ள கடைகளையும் கடந்து சென்று சிறு வாசலில் புகுந்து வந்தால், நமது கண்களுக்குப் பிரமாண்டமாய் வண்ண விளக்குகளில் காட்சியளிக்கிறது ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா.

   வாசல் முன்பு அமர்ந்து 15 க்கும் மேற்பட்ட கவ்வாலி இசைக் கலைஞர்கள் பாடல்களை பாடுகிறார்கள்.

   அந்தப் பாடல்களைக் கேட்பதற்கு இரு புறங்களிலும் மக்கள் கூட்டம் குவிகிறது. அவர்கள் நபிமார்களை புகழ்ந்து பாடல்களை பாடுகின்றனர். ஒவ்வொரு பாடல்களும் சுமார் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் பாடப்படுகிறது.

   இதற்கு ஏற்றாற்போல் ஹார்மோனியம், தபலாவுடன் கைளைத் தட்டியும் இசை எழுப்பப்படுகிறது.

   ஒவ்வொரு பாடல்களும் மெல்லிய ராகத்தில் தொடங்கப்பட்டு பின்னர் உரத்த குரலில் ஒன்றுச் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் பாடும் தலைவரை பின் தொடர்ந்து மற்ற பாடகர்களும் சுருதியுடன் சேர்த்து ஒன்றாக பாடுகின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் புகழ் மாலை பாடப்படுகிறது

   ஒவ்வொரு பாடல்களை இசைக்கும் போதும் அங்கு கூடியிருக்கும் மக்கள் கலைஞர்களை பாராட்டி பணம் தருகிறார்கள்.

   இந்த பணம் பாடல்களை இசைக்கும் ஹோர்மோனியம் பெட்டி முன்பு குவிக்கப்படுகிறது. கிஷ்டி மரபில் வந்த சூஃபி துறவி ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா (கி.பி. 1238-1325) பதாயூனில் பிறந்தவர். பாபா ஃபரீ-உத்-தீன் என்று அழைக்கப்படும் சூஃபி ஞானியின் சீடராக 1269 ல் இணைந்தவர் ஹஜ்ரத் நிஜாமுதீன். பாபா ஃபரீத் சமாதி அடைந்த பிறகு ஹஜரத் நிஜாமுதீன் தில்லிக்கு வந்தார்.

   கவ்வாலி இசை வடிவின் மூலகர்த்தாவான அமீர் குஸ்ரூ என்பவரின் ஆன்மீக குரு ஹஜ்ரத் நிஜாமுதீன். ஆகையால் அவரது சமாதி உள்ள இடத்தில் கவ்வாலி நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன.

   இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு பிரபல இசைக்கலைஞர்கள் இங்கு வந்து கவ்வாலி பாடல்களை பாடிச் செல்வதை பாரம்பரிய சிறப்புமிக்கதாக கருதுகிறார்கள்.

   சூஃபி கவ்வாலி பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் சி.டி.க்களை விற்பனை செய்யும் கடைகளும் தர்காவை சுற்றி காணப்படுகிறது. இங்கு வரும் பல்வேறு சமுதாய மக்கள் இந்த பாடல் சி.டி. க்களை வாங்கிச் செல்கின்றனர்.

   கவ்வாலி பாடல் பாடும் அக்பர் அலி சந்தானி கூறியது: சுமார் 700 ஆண்டு கால பழமை வாய்ந்த நிஜாமுதீன் தர்காவில் எங்கள் மூதாதையர்கள் பரம்பரை பரம்பரையாக கவ்வாலி பாடல்களை பாடி வருகின்றனர்.

   நபிமார்க்களையும், நிஜாமுத்தீன் அவுலியாவின் புகழையும் எங்களை மறந்து பாடும்போது அவர்கள் நேரில் வந்து அருள் மழை பொழிவதைப் போல் உணர்வோம்.

   ஹிந்துஸ்தானி ராகத்தில் பாடும் கவ்வாலி பாடல்களை துபாய், மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் லண்டன், ஆஸ்திரேலியா, மோரீஷஸ், தாய்லாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று பாடிவருகிறோம்.

   கவ்வாலி பாடல்களை பாடும் முன்னர் குரல் இனிதாக அமைய டீ, தண்ணீர் மட்டும் அருந்துவோம். பாடி முடிந்த பின்னர்தான் மற்ற உணவுகளைச் சாப்பிடுவோம். பாரம்பரியமிக்க இந்த பாடல்களை இந்தியர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் எங்களிடம் வந்து பயின்று வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

   பக்தர் சையத் கபிருதீன் கூறியது: ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் நான் தினந்தோறும் வந்து தொழுது செல்கிறேன். இங்கு வியாழக்கிழமை தோறும் பாடப்படும் கவ்வாலி பாடல்களை கேட்டால் கவலை எல்லாம் மறந்து மனதுக்கு அமைதி ஏற்படுகிறது.

   இதன் காரணமாகதான் அனைத்து சாதி மக்கள் ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியாவிடம் வந்து தொழுது செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவிற்கு வந்து துவா (வேண்டுதல்) செய்து செல்கிறார்கள்.

   இவர்களின் அனைத்து துவாக்களை ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவுலியா நிறைவேற்றுகிறார். அதனால் தான் மக்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது. தற்போது இந்த கவ்வாலி பாடல்களில் சினிமா ராகம் கலந்து விட்டது. முன்பு இருந்த கவ்வாலி ராகத்தை இன்று யாரும் சரியாக பாடுவதில்லை. சினிமா பாடல்களைப் போல் கவ்வாலி பாடல்கள் வியாபார ரீதியில் பாடப்படுகிறது என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai