சீரமைப்புக்குத் தயாராகும் தில்லி தமிழ்ப் பள்ளிகள்

தில்லி தமிழ் கல்விக் கழகம் - 89 ஆண்டுகள் பழமையையும் பாரம்பரியப் புகழையும் சுமந்து கொண்டு தலைநகரில் தமிழ் பரப்பி வருகிறது. ஏழு பள்ளிகள். அதில் பயில்வது சுமார் ஏழாயிரம் மாணவர்கள். அவர்களது பெற்றோர், பள்
Published on
Updated on
2 min read

தில்லி தமிழ் கல்விக் கழகம் - 89 ஆண்டுகள் பழமையையும் பாரம்பரியப் புகழையும் சுமந்து கொண்டு தலைநகரில் தமிழ் பரப்பி வருகிறது.

ஏழு பள்ளிகள். அதில் பயில்வது சுமார் ஏழாயிரம் மாணவர்கள். அவர்களது பெற்றோர், பள்ளிக் கல்விக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களால் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் கல்விக்கழக நிர்வாகிகளாக இருப்பர். தில்லி அரசு 95 சதவீத நிதியுதவியையும், மாணவர் சேர்க்கைக் கட்டணம் மூலம் கிடைக்கும் 5 சதவீத நிதியையும் கொண்டு இந்தப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பல மேதைகள் டிடிஇஏ பள்ளிகள் மூலம் உருவாக்கப்பட்டனர்.

-இப்படித்தான் தில்லி பள்ளிக் கல்விக் கழகத்தின் செயல்பாடுகளை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அறிவார்கள். ஆனால் நிதி ஆதாரத்தையும் மேம்பாட்டு உதவிகளையும் எதிர்ப்பார்த்து இந்தத் தமிழ் பள்ளிகள் காத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை என்பது இங்கு படித்த முன்னாள் மாணவர்களின் கருத்து. அதனால், தாங்கள் படித்த பள்ளிகளை மறுசீரமைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

டிடிஇஏ முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ற்ங்ஹ-ஹப்ன்ம்ய்ண்.ர்ழ்ஞ்/ இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் பழைய மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, முன்னாள் மாணவர்கள் திரட்டிய நிதி, டிடிஇஏ "முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை'  என்ற பெயரில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கும் தில்லி தமிழ்க் கல்விக்கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பள்ளிக்கு உதவ நினைக்கும் மாணவர்கள், நேரடியாக அறக்கட்டளையில் நன்கொடை அளித்து அதன் மூலம் தமது சீரமைப்பு முயற்சியை மேற்கொள்ளலாம். இப்படி ஏழு பள்ளிகளுக்கும் சேர்த்து முன்னாள் மாணவர்கள் சேகரித்த நிதி மூலம் மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.1,887,883.50/- ஆகும் என முன்னாள் டிடிஇஏ மாணவர்களின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தில் பயின்ற பல முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்டவர் இந்துபாலா. இவர் டிடிஇஏ பள்ளியில் 1964-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஆசிரியையாகவும் 17 ஆண்டுகள் முதல்வராகவும் பணியாற்றினார். தற்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலில் (என்.சி.இ.ஆர்.டி.) ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்த்த முயற்சி குறித்து பேசிய இந்துபாலா, ""பல தரப்பட்ட மாணவர்களை தில்லி பள்ளிக்கல்விக்கழகப் பள்ளிகள் சந்தித்து வருகின்றன. அவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் இன்றைய நிலைமையைக் கண்டு வேதனை அடைந்தனர். பள்ளிகளை சீர்ப்படுத்தும் நடவடிக்கை, முந்தைய காலங்களில் சரிவர நடைபெறவில்லை. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு வந்த பள்ளிக்கழக நிர்வாகம், முன்னாள் மாணவர்களின் மறுசீரமைப்பு முயற்சிக்கு ஆதரவு அளித்தது. சுமார் ரூபாய் இரண்டு கோடி மதிப்பிலான உதவிகளை மாணவர்கள் செய்துள்ளனர். ஒரு முன்னாள் மாணவர், தான் படித்த லக்ஷ்மிபாய் நகர் பள்ளியில் டிஜிட்டல் பள்ளி அறை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அது செயல்வடிவம் பெற்றால், இலவசமாக மாணவர்கள் டிஜிட்டல் பள்ளிகளில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும்'' என்றார்.

இதே போன்று, டிடிஇஏ மோதி பாக் பள்ளியில் 1982-ம் ஆண்டில் முன்னாள் மாணவர் ரவீந்திரன் (அடுக்குமாடி வளாகங்கள் கட்டுமான தனியார் நிறுவனத் தலைவர்), 1984-ம் ஆண்டில் சங்கர் (சர்வதேச குளிர்பான நிறுவனத்தின் இயக்குநர்) என்பவரும் படித்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதைத் தவிர இவர்கள் இருவருக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. பள்ளி மேம்பாட்டுக்காக ஒன்று சேர்ந்த இவர்கள் இப்போது நெருங்கிய நண்பர்கள். இவர்களின் சீரமைப்பு முயற்சி வித்தியாசமாக உள்ளது.

டிடிஇஏ பள்ளியில் நடிகர் சரத்குமார் படித்தார் என்பதை அறிந்த இருவரும், எப்படியோ சரத்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு, தில்லிக்கும் வரவழைத்தனர். சரத்குமாரை தில்லி தமிழ்க்கல்விக் கழகத்தின் சில பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றனர். பழைய பள்ளி மீதிருந்த காதல் சரத்குமாருக்கும் அதிகரித்தது. இதன் விளைவால், ""பள்ளிகளின் ஆண்டு விடுமுறையின்போது தில்லியில் மிகப்பெரிய கலை நிகழ்ச்சி நடத்தலாம். அதில் கிடைக்கும் வருவாயை தமிழ்ப் பள்ளிகளின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்'' என நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

பழைய மாணவர்களின் முயற்சியை டிடிஇஏ செயலர் ஆர். ராஜுவும் வரவேற்றுள்ளார். ""தில்லியில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளுடன் போட்டி போடக்கூடிய வகையில் ஏழு பள்ளிகளும் திகழ வேண்டும். அவற்றை மேம்படுத்த முயற்சிக்கும் முன்னாள் மாணவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

எந்த நிதியையும் மாணவர்கள் எங்கள் கழகத்துக்கு அளிக்க வேண்டியதில்லை. தரமான, தகுதிவாய்ந்த கல்விக்கு எது தேவை என்பதை முன்னாள் மாணவர்கள் கருதுகிறார்களோ அதை அவர்களே நேரடியாக செய்யலாம்'' என்றார் ஆர். ராஜு.

தலைநகரில், பல மேதைகள் உருவாக்கிய டிடிஇஏ பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படுவது பெருமை அளிக்கும் செய்திதான். ஆனால், மாணவர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் பழைய பாடமுறையைக் கற்றவர்களாக உள்ளனர். பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும் முன்னாள் மாணவர்களும், டிடிஇஏ நிர்வாகமும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சமகால பயிற்சி அளிக்கும் முயற்சியிலும்  ஈடுபட வேண்டும்.

எங்கோ தலைநகரில் தமிழ்க் கல்வி சொல்லிக்கொடுக்கும் பள்ளி என்ற நினைப்புடன் இல்லாமல். டிடிஇஏ பள்ளிகளுக்கு வேண்டிய உதவியைத் தமிழக அரசும் செய்து கொடுக்க வேண்டும்.

அதற்கான கோரிக்கைகளுடன் டிடிஇஏ நிர்வாகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் கதவுகளைத் தட்ட வேண்டும். அப்போதுதான், வேதனையில் உள்ள முன்னாள் மாணவர்களின் முயற்சியும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்கால கனவுகளும் நனவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.