புது தில்லி, பிப்.10: தலைநகர் தில்லியில் டிடிசி (தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன்) பஸ்களால் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே இது குறித்து தில்லி உயர் நீதிமன்றம் வரும் 24-ம் தேதி விசாரிக்க இருக்கிறது.
தில்லி மாநகரில் டிடிசி பஸ்களால் சாலை விபத்துகள் அதிகரித்து, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இப்பிரச்னையை தில்லி உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க இருக்கிறது.
அதிவேகம் காரணமாக விபத்துகள் அதிகரித்து, உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்ததால், மாநகரில் செயல்பாட்டில் இருந்த ப்ளுலைன் பஸ்களை அறவே ஒழித்தது தில்லி உயர் நீதிமன்றம். படிப்படியாக நிறுத்தப்பட்ட ப்ளுலைன் பஸ்களுக்கு மாற்று ஏற்பாடாக டிடிசி பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது டிடிசி பஸ்களாலும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ப்ளுலைன் பஸ்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவரே, இப் பிரச்னையையும் நீதிமன்றம் முன் கொண்டு செல்லவிருக்கிறார்.
கடந்த ஆண்டில் மட்டும், டிடிசி பஸ்களால் 79 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2010-ம் ஆண்டில் டிடிசி பஸ்களால் ஏற்பட்ட 48 சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சாலை விபத்துகளின் விகிதம் சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது.
கடந்த ஆண்டில் சாலை விபத்துகளை ஏற்படுத்தியதற்காக, 6,436 டிடிசி பஸ் டிரைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஆயிரம் டிரைவர்கள் உரிமம் இல்லாமலேயே பஸ்களை ஓட்டிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று போக்குவரத்துத் துறையிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பொதுப் போக்குவரத்துச் சாதனமான டிடிசி பஸ்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகமாக நிகழ்ந்து வருவது குறித்து வேதனை தெரிவித்திருக்கும் தில்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து வரும் பிப்ரவரி 24-ம் தேதி விசாரிக்கும் எனத் தெரிகிறது.