புது தில்லி, பிப். 10: மயூர் விஹார் ஃபேஸ் 1-ல் உள்ள ஸ்ரீ சுப சித்தி விநாயகர் திருக்கோவிலில் வியாழக்கிழமை மாலை திருமழிசை ஆழ்வாரின் திருநட்சத்திர மஹோத்சவம் நடைபெற்றது.
ஆழ்வார் திவ்யப் பிரபந்தம் திட்டத்தின் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, கோழியாலம் டாக்டர் அனந்தாசாரியார் "ஆழ்வாரின் வாழ்க்கை வரலாறும், அவரது திவ்ய தேச திவ்ய தம்பதிஸ் அனுபவமும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இதைத்தொடர்ந்து "தேர்ந்தெடுக்கப்பட்ட பாசுரங்களுடன் ஸ்ரீ திருவேங்கடமுடையானுடனான ஆழ்வாரின் அனுபவம்' என்ற தலைப்பில் ஸ்ரீமத் ஆண்டவன் திருவடி, நடாதூர் சுதர்சனன் சொற்பொழி
வாற்றினார்.
இறுதியாக, ஸ்ரீமத் ஆண்டவன் திருவடி நடாதூர் டாக்டர் ஏ.எஸ். ஆரவமுதாசாரியார் நான்முகன் திருவந்தாதியை மையமாக வைத்து "ஆழ்வாரின் பாகவத அனுபவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ சுப சித்தி விநாயகர் கோவில் கமிட்டிச் செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.