புது தில்லி, பிப்.10: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடியே 41 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி 1998-ம் ஆண்டு மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை விளையாட்டு வீரர்களின் பயிற்சி, மைதானங்களில் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துதல், பல்வேறு போட்டிகளை நடத்தியது உள்ளிட்டவற்றுக்காக இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிதியின் கீழ் கடந்த ஆண்டில் மட்டும் 30 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு மட்டும் ரூ. 12 லட்சத்து 12 ஆயிரத்து 355 செலவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சக நிதியுதவி: மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியின் மூலம் துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மானவ்ஜித் சிங், மன்ஷெர் சிங், ரஞ்சன் ஜோதி, டென்னிஸ் வீரர்கள் சோம்தேவ், சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா, யூகி பாம்ப்ரி, மகேஷ் பூபதி, அனுப் ஸ்ரீதர், தட கள வீரர்கள் ஓம் பிரகாஷ் சிங், கிருஷ்ணா பூனியா, விகாஸ் கெüடா, ஜோனி, பிரீஜா ஸ்ரீதரன், கவிதா ரெüத், ஜெய்ஷா, சுதா சிங் ஆகியோர் கடந்த ஆண்டில் பயிற்சி பெற்றுள்ளனர்.
முன்னாள் தட கள வீராங்கனை பி.டி.உஷா கேரளத்தில் நிறுவியுள்ள தட கள பள்ளிக்கு தட களப் பாதை அமைக்க ரூ. 4 கோடியை 92 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நல நிதித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்கள் 32 பேருக்கு ஓய்வூதியமும், 44 பேருக்கு கருணைத் தொகையும் அளிக்கப்பட்டுள்ளது. 1960-ம் ஆண்டில் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய கால்பந்து அணியினர் 13 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.