மனுவைத் திரும்பப் பெற்றார் தளபதி

புது தில்லி, பிப். 10: ராணுவ தலைமைத் தளபதி வயது விவகாரத்தில் ஆவணங்களில் உள்ளபடி மத்திய அரசு எடுத்த முடிவுதான் சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் நீதிபதிகள் கூறியதற்கு ஏற்ப, இது தொடர
Published on
Updated on
2 min read

புது தில்லி, பிப். 10: ராணுவ தலைமைத் தளபதி வயது விவகாரத்தில் ஆவணங்களில் உள்ளபடி மத்திய அரசு எடுத்த முடிவுதான் சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் நீதிபதிகள் கூறியதற்கு ஏற்ப, இது தொடர்பான தனது மனுவை ராணுவ தளபதி வி.கே.சிங் திரும்பப் பெற்றார்.

இதையடுத்து மத்திய அரசுக்கும், ராணுவ தளபதிக்கும் இடையே நடைபெற்று வந்த வயது தொடர்பான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி வரும் மே 31-ம் தேதியுடன் ராணுவ தளபதி வி.கே. சிங் ஓய்வு பெற இருக்கிறார்.

முன்னதாக தனது பிறந்த தேதியை மே 10, 1951 எனக் கருத வேண்டும் என்று வி.கே. சிங் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்தது. ஆவணங்களில் உள்படி மே 10, 1950-ம் ஆண்டுதான் அவரது பிறந்த தினம் என  மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து வி.கே. சிங், உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இது தொடர்பான வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய பொது தேர்வாணையம் சிங்கின் பிறந்த தேதியை மே 10, 1950 என பதிவு செய்த போது அதை சரி செய்ய முயலாதது ஏன்? என்று ஜெனரல் சிங்கிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அப்போது இந்திய ராணுவ அதாதெமி (ஐஎம்ஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) ஆகியவற்றில் சிங்கின் பிறந்த நாள் மே 10, 1950 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎம்ஏ அல்லது என்டிஏ-வில் சேர்ந்திருந்தால் அந்த ஆவணத்தில் உள்ளபடி மே 10, 1950 என்றிருப்பதை ஏற்றிருப்பீர்கள்தானே? என்று நீதிபதிகள் கேட்டனர். அனைத்து ஆவணங்களிலும் வயது மே 10, 1950 என்றே உள்ளது. ஜெனரல் சிங்கின் வயது தொடர்பான முதன்மை ஆவணமாகக் கருதப்படும் யுபிஎஸ்சி ஆவணத்தில் வயது திருத்தப்படவேயில்லை. அதற்கான முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளாதது ஏன் என்று நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஹெச்.எல். கோகலே ஆகியோர் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித்திடம் கேட்டனர். உங்கள் தரப்பு மனுவை வாபஸ் பெறுவது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

அதே நேரத்தில் தளபதியின் பிறந்த தினம் மே 10 1950 என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால் ராணுவ தளபதி முறைப்படி அளித்த மனுவை நிராகரித்து டிசம்பர் 30-ம் தேதி வெளியிட்ட உத்தரவைத் திரும்பப் பெறுவதாக அட்டார்னி ஜெனரல் வாகன்வதி தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் அரசு பழிவாங்கும் போக்கில் செயல்படக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உணவு இடைவேளையின் போது, தங்கள் தரப்பு மனுவை வாபஸ் பெறுவதாக வி.கே. சிங்கின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

 தளபதி ராஜிநாமா? உச்ச நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து ராணுவ தளபதி வி.கே. சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.