புதுதில்லி, பிப்.10: வயது விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தான் தொடர்ந்திருந்த வழக்கை வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றார் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்.
* 1970: வி.கே.சிங் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.
*2002: தனது வயது ராணுவத்தின் அட்ஜுடன்ட் ஜெனரல் அலுவலகப் பதிவேடுகளில் 1951, மே 10 என்று இருப்பதாகவும், ஆனால் ராணுவ செயலக ஆவணங்களில் ஒரு ஆண்டு முன்னதாக 1950, மே 10 என்று இருப்பதாகவும், அதை சரிசெய்யும்படியும் கோருகிறார்.
*2006: லெப்டினென்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெறுகிறார் வி.கே.சிங். அப்போது தான் 1950-ம் ஆண்டு பிறந்ததாகவே உறுதிமொழி அளிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.
*2008: வி.கே.சிங் ராணுவக் கமாண்டராக பதவி உயர்வு பெறுகிறார். அப்போது தனது பிறந்த தேதியாக 1950-ம் ஆண்டையே ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி அளிக்கிறார்.
*2010: ராணுவத் தலைமைத் தளபதியாக ஏப்ரல் மாதம் நியமிக்கப்படுவதற்கு முன்பாக , அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூருக்கும், பாதுகாப்புத்துறைச் செயலருக்கும் எழுதிய கடிதத்தில் தனது வயது தொடர்பான பிரச்னை முடிவு பெற்ற ஒன்று என்று குறிப்பிடுகிறார்.
*2010, அக்டோபர்: வி.கே.சிங்கின் பிறந்த நாள் எது என ஐஏஎஸ் அதிகாரியொருவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருகிறார். அந்த மனு பாதுகாப்புத் துறையின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பப்படுகிறது. அவர் ராணுவத் தலைமைத் தளபதியின் பிறந்த ஆண்டு 1951 என்று பதிலளிக்கிறார்.
*2011 மே,6: சட்ட ஆலோசனை பெறுவதில் தங்களை மீறி செயல்பட்டதற்கு பாதுகாப்புத் துறை ஆட்சேபம் தெரிவிக்கிறது. இதற்கிடையில் ராணுவத் தலைமையகம் ஆவணங்களைச் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளுகிறது.
*2011 மே: ராணுவத் தலைமைத் தளபதி பாதுகாப்புத் துறைக்கு தனது பிறந்த தேதி குறித்த வேறுபாட்டை சரி செய்யுமாறு மனு அளிக்கிறார்.
*2011 ஜூலை ,21: அட்டர்னி ஜெனரலின் கருத்துப்படி, வி.கே.சிங்கின் மனுவை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரிக்கிறது.
*2011 ஆகஸ்ட்: தனது பிறந்த நாள் தொடர்பான பிரச்னை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு சட்டரீதியாக புகார் அளிக்கிறார்.
*2011 டிசம்பர் 30: அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைப்படி, பாதுகாப்பு அமைச்சகம் வி.கே.சிங்கின் புகாரை நிராகரிக்கிறது.
*2012 ஜனவரி 16: வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.
*2012 பிப்ரவரி 3: பாதுகாப்புத் துறை அமைச்சகம் வி.கே.சிங் வயது விவகாரத்தில், 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவு முறையற்றது என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் கால அவகாசம் வழங்
கியது.
*2012 பிப்ரவரி 10: டிசம்பர் 30-ம் தேதியிட்ட உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கிறது. ஆனால் 2011 ஜூலை 21-ம் தேதியிட்ட உத்தரவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.
இதன்பிறகு சிங்கின் மனுவை விசாரிப்பதற்கு ஏதுமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்கிறது. இதையடுத்து வி.கே.சிங் தனது வழக்கை வாபஸ் பெறுகிறார்.