Enable Javscript for better performance
அரசியல் பின்னணி இல்லாதவர்க்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை- Dinamani

சுடச்சுட

  

  அரசியல் பின்னணி இல்லாதவர்க்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை

  By புது தில்லி,  |   Published on : 04th September 2013 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாகக் களம் இறக்க ஆம் ஆத்மி கட்சி முன்னுரிமை அளித்து வருகிறது.

  இந்தப் பட்டியலில் ஆட்டோ டிரைவர், முன்னாள் போலீஸ்காரர் போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

  தேர்தல் சின்னமாக "துடைப்பம்': அரவிந்த் கேஜரிவால், பிரசாந்த் பூஷண், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. அண்ணா ஹசாரே உருவாக்கிய "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற இவர்கள் பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கினர். அதன் பிறகு அண்ணா ஹசாரே குழு தனியாகவும் அரவிந்த் கேஜரிவால் குழு தனியாகவும் செயல்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிர்வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி "துடைப்பம்' சின்னத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

  மற்ற அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சில உத்திகளை ஆம் ஆத்மி கட்சி கையாண்டது. அதன்படி, தேர்தலில் போட்டியிட சமூக நலனில் அக்கறை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதில் தகுதிவாய்ந்தவர்கள் தொகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு அவர்களின் விவரம் ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.  அதைப் பார்க்கும் பொதுமக்கள் வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் குறித்து ஆட்சேபம் இருந்தால் அதை ஆம் ஆத்மி தலைமைக்கு மின்னஞ்சல், தொலைபேசி அல்லது நேரில் தெரிவிக்கலாம். அதைப் பரிசீலித்து சர்ச்சைகள், குற்றப் பின்னணி இல்லாத தகுதிவாய்ந்தவர்கள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

  அந்த வகையில், தில்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் இதுவரை 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம்:

  வழக்குரைஞர்: ஷாதரா சட்டப்பேரவைத் தொகுதியில் வழக்குரைஞர் சுரேந்தர் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அப்பகுதி மக்களின் குடிநீர் உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடியவர். அவர் தொடுத்த "ரிட்' வழக்குதான், தில்லி அரசு "குடிநீருக்கான மாஸ்டர் திட்டம் 2011-21' என்பதை அறிமுகப்படுத்த காரணமாகியது. இமாசல பிரதேசம் ரேணுகா அணையில் இருந்தும், ஹரியாணாவின் முனக் கால்வாயில் இருந்தும் தில்லிக்கு தண்ணீர் கிடைக்கவும் அந்தத் மாஸ்டர் திட்டம் வகை செய்தது.

  முன்னாள் பத்திரிகையாளர்: திலக் நகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜர்னைல் சிங், மினரல் வாட்டர் கம்பெனியை உருவாக்கி நடத்தி வருகிறார். இவர் முன்னாள் பத்திரிகையாளர். ஆம்ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதன் உறுப்பினராக இருந்து வருகிறார்.

  முன்னாள் போலீஸ்காரர்: முண்ட்கா தொகுதியின் வேட்பாளராக தில்லி காவல் துறையில் போலீஸ்காரராக  பணியாற்றிய கிருஷண் குமார் ரதி அறிவிக்கப்பட்டுள்ளார். அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தியபோது, தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு மக்களோடு மக்களாக இவர் போராட்டக் களமிறங்கினார்.

  முன்னாள் கமாண்டோ வீரர்: தேசிய பாதுகாப்புப் படையின் முன்னாள் கமாண்டோ சுரேந்தர் சிங். மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது நேரடியாக களத்தில் இருந்து செயல்பட்டவர். அதில் உடல் ஊனம் அடைந்ததால் பணியில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  கமாண்டோ வீரர் சுரேந்தர் சிங் தனது ஒய்வூதியம் மற்றும் பிற பயன்களுக்காகப் போராடி வருகிறார். ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட கிடைத்த அனுபவம் குறித்து அவர் கருத்து கூறுகையில், "பணியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு ஓய்வூதிய பலன்கள் கோரி மத்திய அரசிடம் போராடி வருகிறேன். இப்போது தேர்தல் என்னும் இன்னொரு போராட்டக் களத்தையும் சந்திக்கவுள்ளேன் ஆனால், இது மக்களுக்காக' என்றார்.

  முன்னாள் போலீஸ்காரர் கிருஷ்ணகுமார் ரதி கூறுகையில் "சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýம், பாஜகவும் பணத்தையும், சாராயத்தையும் பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்க்கும். ஆனால் நாங்கள் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்போம்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai