பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கென தனி ஐடிஐ தொடங்க வேண்டும் என்ற முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் கோரிக்கையை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தில்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியை பிரகாஷ் சிங் பாதல் வியாழக்கிழமையை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கான எந்தத் திட்டத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்கத் தயாராக இருப்பதாக மேனகா காந்தி உறுதியளித்தார்.
பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்காக, மாநிலம் முழுவதும் அவர்களுக்கென தனி ஐடிஐ அமைப்பதற்குத் தேவையான விரிவான திட்ட அறிக்கையை தனது அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் மேனகா காந்தி கேட்டுக் கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் மேனகா காந்தியிடம் பிரகாஷ் சிங் பாதல் விவாதித்தார்.