பட்டப்பகலில் தொழிலதிபர் படுகொலை
தலைநகர் தில்லியில் பட்டப் பகலில் வீட்டில் தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மத்திய தில்லியில் புதன்கிழமை மாலையில் நிகழ்ந்த இச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது: மத்திய தில்லி, ராஜேந்தர் நகர் பகுதியில் எஸ்-பிளாக்கில் வசித்து வந்தவர் தருண் பஜாஜ். கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். அவரது மனைவி ரிது. சட்ட ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல புதன்கிழமை காலையில் வேலைக்கு போய்விட்டார். இந் நிலையில், தருண் பஜாஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது அலுவலக ஊழியர் சந்த்ராம், வேலை விஷயமாக அவரைப் பார்ப்பதற்காக மாலை 3.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்ததால் பல முறை அலாரம் மணியை அடித்துள்ளார். ஆனால், எந்தவிதப் பதிலும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, அவரது மனைவி ரிதுவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சுமார் 5.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார்.
கதவை உடைத்து உள்ளே சென்ற போது தருண் பஜாஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சடலம் நிர்வாண நிலையில் போர்வையால் போர்த்தப்பட்டுக் கிடந்தது.
இதைத் தொடர்ந்து தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். சடலம் கிடந்த அறையில் மூன்று டம்ளர்கள் இருந்தன. இதனால், இக் கொலையில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு தெரிந்தவர்கள்தான் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இச் சம்பவம் குறித்து அவரது மனைவி ரிது, சந்த்ராம் உள்பட மற்ற அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இக் கொலை நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே கொலையாளிகள் வீட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.