பிரதமர் அலுவலக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி செல்வகுமார் நியமனம்

பிரதமர் அலுவலக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எஸ். செல்வகுமார் (45) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது.
Published on
Updated on
1 min read

பிரதமர் அலுவலக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எஸ். செல்வகுமார் (45) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஐஏஎஸ் பணியில் 1997-ஆம் ஆண்டில் சேர்ந்தார். கர்நாடக மாநிலத்தின் வருவாய்த் துறை, நகர்ப்புற மேம்பாடு, பணியாளர் நிர்வாகம், வேளாண் துறை, மனித வள மேம்பாட்டுத் துறை, சுகாதாரம் ஆகிய துறைகளில் உதவி ஆணையர், துணை ஆணையர், திட்ட அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.

தற்போது அவர் கர்நாடக மாநில எரிசக்தித் துறையின் கீழ் உள்ள கர்நாடகா மின் விநியோக நிறுவன மேலாண் இயக்குநராக உள்ளார். மத்திய அரசின் இணைச் செயலர் அந்தஸ்துக்கு இணையான பதவி இது. இந் நிலையில், செல்வகுமாரை பிரதமர் அலுவலகத்தில் காலியாகவுள்ள இயக்குநர் பதவிக்கு உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை தேர்வு செய்தது. இதையடுத்து, இவரை அப் பதவிக்கு நியமிக்கும் உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை பிறப்பித்தது.

இதையடுத்து, கர்நாடக அரசு தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், "உடனடியாக செல்வகுமாரை மாநில அரசுப் பணியில் இருந்து விடுவித்து மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் செல்வகுமார் சேர்ந்தால், அந்த அலுவலகத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் இரண்டாவது தமிழராக கருதப்படுவார். இவருக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் செயலராக ஆர். ராமானுஜம் பணியாற்றி வருகிறார். 1979-ஆம் ஆண்டு மத்திய பிரதேச பிரிவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அவருக்கு, அண்மையில்தான் மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு பணி நீட்டிப்பை வழங்கியது.

பிரதமர் அலுவலகத்தில் பிரஜேந்திர நவ்நீத் என்ற 1999-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி, சில நாள்களுக்கு முன்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த செல்வகுமார் அதே அலுவலகத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X