தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலையிலே தூறல் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை காணப்பட்டது.
தில்லியில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்தது. ஒரு கட்டத்தில் 47.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, புழுக்கம் அதிகரித்ததால் தில்லிவாசிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இந் நிலையில், கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸýக்கும் கீழே குறையத் தொடங்கியது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்தில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ வரை உயரத் தொடங்கியதும் புழுக்கமும் அதிகரித்து காணப்பட்டது.
இந் நிலையில், புதன்கிழமை காலையில் இருந்து வானம் மேகம் மூட்டத்துடன் இருந்து வந்தது. வியாழக்கிழமை காலையில் நகரின் பெரும்பாலான இடங்களில் தூறல் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 23.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி நிலவரப்படி காற்றில் ஈரப்பதம் 96 சதவீதமாக இருந்தது. மாலை நிலவரப்படி நகரில் 26.2 மி.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளி, சனி (ஜூன் 27, 28) ஆகிய இரண்டு நாள்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மேலும், ஜூலை 2-ஆம் தேதி வரை இந் நிலை தொடரும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.