என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை கட்டாயம்

""என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விசாரணையில்
Published on
Updated on
1 min read

""என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விசாரணையில், அந்தச் சம்பவத்தில் குற்றம் நடைபெறவில்லை என்பது நிரூபிக்கப்படும்வரை,  என்கவுன்ட்டரில் தொடர்புடைய போலீஸாருக்கு விருது எதுவும் வழங்கி கௌரவிக்கக் கூடாது'' என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், "மும்பையில் கடந்த 1995 - 1997ஆம் ஆண்டுகளுக்கு இடையே 99 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 135 பேர் பலியாகியுள்ளனர். ஆகையால், என்கவுன்ட்டர் தொடர்பாக வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்து வெளியிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது என்கவுன்ட்டர் தொடர்பாக வழிகாட்டுதல்களை நீதிபதிகள் வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

என்கவுன்ட்டர் தொடர்பாக நாட்டில் எந்த வழிகாட்டுதல்களும் இல்லாதது கவலையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு வழிகாட்டுதல்கள் தேவையாகும். அப்போதுதான், சட்டத்தை தங்களது கைகளில் எடுக்கும் குற்றவாளிகளுக்கு (போலி என்கவுன்ட்டரில் ஈடுபடுபவர்களுக்கு) தண்டனை வழங்க முடியும். மேலும், மக்கள் மத்தியில் போலீஸார் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

ஒருவரின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படும்போதும், உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதுதான் என்கவுன்ட்டரில் ஈடுபட வேண்டும் என்று அரசமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி, என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகையால், போலீஸாரின் என்கவுன்ட்டர்களில் நிகழும் அனைத்து மரணங்கள் குறித்தும் கட்டாயமாக நீதி விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

என்கவுன்ட்டர் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக விருதுகளோ அல்லது பதவி உயர்வோ அளித்து கௌரவிக்கக் கூடாது. விசாரணையில், அந்தச் சம்பவத்தில் குற்றம் நடைபெறவில்லை என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட பிறகே, விருதுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில், கிரிமினல்களின் நடமாட்டம் குறித்து புலனாய்வுத் தகவலோ அல்லது யாரேனும் தகவல் அளித்தாலோ அதை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணுக் கருவியிலோ பதிவு செய்ய வேண்டும்.

என்கவுன்ட்டர் குறித்து சி.ஐ.டி. போலீஸார் அல்லது உயரதிகாரியின் கண்காணிப்பின்கீழ் வேறொரு காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை, வழக்கு தொடர்பான குறிப்புகள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்ப காலதாமதம் செய்யக் கூடாது.

என்கவுன்ட்டர் செய்த போலீஸார் தங்களது ஆயுதங்களை உடனடியாக தடயவியல் துறையிடம் அளிக்க வேண்டும்.

விசாரணையில், என்கவுன்ட்டரில் ஈடுபட்டவர்கள் தவறிழைத்திருப்பது தெரிந்தால், அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com