கிருஷ்ணர் அவதரித்த ஊரான பிருந்தாவனில் வசிப்பதற்காக கணவரை இழந்த வெளிமாநிலப் பெண்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நடிகை ஹேமமாலினிக்கு, அங்கு வசித்து வரும் மேற்கு வங்கப் பெண்கள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் முறையிடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதி எம்.பி.யான நடிகை ஹேமமாலினி சில நாள்களுக்கு முன்பு கூறியபோது, ""உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் நகரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கணவரை இழந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கெனவே தங்கியுள்ளனர்.
இதனால் பிகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்கள் பிருந்தாவன் நகருக்கு கூட்டமாக வரக் கூடாது. அவர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள கோயில்களில் தங்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு பிருந்தாவன் நகரில் வசிக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆர்த்தி நாத் (65) கூறுகையில்,""நடிகை ஹேமமாலினி எங்களை பிருந்தாவனில் இருந்து வெளியேற்ற விரும்புகிறார். அப்படியானால் நாங்கள் இனி எங்கே போவோம்'' என்று அவர் தெரிவித்தார். ஆர்த்தி நாத் உள்பட 50 மேற்கு வங்கப் பெண்கள் செவ்வாய்க்கிழமை துர்கா பூஜையைக் கொண்டாட பிருந்தாவனில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் கே.என். திரிபாதி ஆகியோரை சந்தித்து இது குறித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சஷி பாஞ்சா கூறுகையில், ""அந்தப் பெண்களை நான் சந்தித்துப் பேசுவேன். அவர்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை தெரிந்து கொள்வேன். அதன் பிறகு மாநில அரசு எந்த வகையிலான உதவிகளைச் செய்ய முடியும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.