தலைநகர் தில்லியில் தினமும் 18 குழந்தைகள் காணாமல் போனதாக 2013ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட அரசு புள்ளி விவரங்கள் தெரிவின்றன என குழந்தை உரிமைகள் அமைப்பான "கிரை' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தில்லி அரசிடம் இருந்து அந்த அமைப்பு தகவல் சேகரித்துள்ளது. அதன் விவரம்:
தில்லியில் தினந்தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தினமும் 18 குழந்தைகள் வரை காணாமல் போயுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு தில்லியில் உள்ள தெருக்களில் இருந்து தினமும் 14 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
தில்லி நகரத்தில் 2013ஆம் ஆண்டு மொத்தம் 6,494 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில் 3,059 பேர் பெண் குழந்தைகள். 2,709 பேர் ஆண் குழந்தைகள். 2012ஆம் ஆண்டு 4,086 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டவர்களில் 832 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சில மாவட்டங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, மேற்கு தில்லியில் 54.82 சதவீதமும், வடமேற்கு தில்லியில் 47.24 சதவீதமும் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. எனினும், வடகிழக்கு தில்லி, புது தில்லி மாவட்டங்களில் மட்டும் இது குறைந்துள்ளது.
இதுகுறித்து "கிரை' அமைப்பின் வடக்குப் பிராந்திய இயக்குநர் சோஹா மொய்த்ரா கூறியதாவது:
தில்லியில், காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கையும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. இதற்கு, சட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள பலவீனம், அக்கறையின்மை, பாதுகாப்பின்மை ஆகியவைதான் காரணம்.
எனவே, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி, அவர்களுக்கான திட்டங்கள், கொள்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சோஹா மொய்த்ரா கூறினார்.