தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இளைஞரைத் தாக்கிக் கொன்ற வெள்ளைப் புலி

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பார்வையாளராக வந்த இளைஞரை வெள்ளைப் புலி தாக்கிக் கொன்றது. செவ்வாய்க்கிழமை
Published on
Updated on
2 min read

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பார்வையாளராக வந்த இளைஞரை வெள்ளைப் புலி தாக்கிக் கொன்றது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.

தில்லி - மதுரா சாலையில் உள்ள புராண கிலா கோட்டை அருகே அமைந்துள்ளது தேசிய உயிரியல் பூங்கா. இங்கு பல்வேறு வகையான காட்டு விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புலி, சிங்கம், ஓநாய், நரி போன்ற வீரியமிக்க விலங்குகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பார்வையிட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் வெள்ளைப் புலி பராமரிக்கப்படும் பகுதியில் உள்ள தடுப்பு வேலியைத் தாண்டி, 20 வயது இளைஞர் திடீரென குதித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உலவிக் கொண்டிருந்த 8 வயது "விஜய்' என்ற ஆண் வெள்ளைப் புலி அந்த இளைஞரின் கழுத்துப் பகுதியைத் தாக்கியது. பின்னர், கவ்வி இழுத்துச் சென்றது. தொடைப் பகுதியிலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

"இச்சம்பவத்தில் அந்த இளைஞரின் ஆடை கிழிந்தது. சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அதே இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, புலி தாக்கும் முன்பு தனது தலையைப் பாதுகாக்கும் வகையில் கையைக் கூப்பி தலைக்கு அருகே அவர் வைத்திருந்தார்' என்று  நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இயக்குநர் பேட்டி: சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர் அமிதாப் அக்னி ஹோத்ரி கூறியதாவது:

பிற்பகல் சுமார் 1 மணியளவில் பூங்காவில் வெள்ளைப் புலி இருந்த பகுதியில் தடுப்பு வேலியைத் தாண்டி பார்வையாளர் மக்சூத் குதித்தார். அப்போது, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் பிரவீண் கூச்சலிட்டார். இதைத் தொடர்ந்து, வயர்லஸ் கருவி மூலம் உதவி கோரி பூங்கா ஊழியர்கள், உயிரியல் பூங்கா அதிகாரிகள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கு தகவல் அனுப்பினர். தாக்குதலில் இருந்து பார்வையாளரைக் காப்பாற்றுவதற்காக புலியின் கவனத்தைத் திசை திருப்ப பாதுகாவலர் பிரவீணும், பூங்கா ஊழியர்களும் முயன்றனர். ஆனால், அது பலனளிக்காத நிலையில், அவரை அதே இடத்தில் புலி தாக்கிக் கொன்றது.

தேசிய உயிரியல் பூங்காவில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விலங்குகளின் வாழிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்பகுதி தடுப்பு வேலியைக் கடந்து விலங்குகள் உள்ள பகுதியின் அகழிச் சுவரை பார்வையாளர்கள் தொட முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சம்பவத்தில் பார்வையாளர் தடுப்பு வேலியைக் கடந்து விலங்கு பராமரிக்கப்படும் பகுதிக்குள் குதித்ததால் புலி தாக்கி இறக்க நேரிட்டது' என்றார்.

தென்கிழக்கு தில்லி துணை காவல் ஆணையர் எம்.எஸ். ரந்தாவா, உதவிக் காவல் ஆணையர் அனில் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து எம்.எஸ். ரந்தாவா செய்தியாளர்களிடம் கூறுகையில், "புலி தாக்கி உயிரிழந்தவர் தில்லியைச் சேர்ந்த மக்சூத் என்பது தெரிய வந்துள்ளது. புலி தாக்கியதால் அந்த நபர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து பிரேத பரிசோதனைக்குப் பிறகே கூற முடியும்' என்றார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து புலிகள் இருந்த பகுதிக்கு பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், பார்வையாளர்களும் அதிர்ச்சியில் காணப்பட்டனர். 

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் புலியிடம் சிக்கிய இளைஞர்.

இளைஞரை தாக்கும் புலி.

வெள்ளைப் புலி தாக்கி இறந்த இளைஞர் மக்சூத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com