பண்டிட் தீனதயாள் உபாத்யாய் 98-ஆவது பிறந்த நாள் கொண்டாடட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 2,500 பேர் ரத்த தானம் வழங்க உள்ளதாக பிரதேச பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: பண்டிட் தீனதயாள் உபாத்யாயின் பிறந்த நாள் விழாவையொட்டி, தில்லியில் கட்சியின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், தொண்டர்கள் வரும் 25-ஆம் தேதி தியாகராஜர் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட முகாமில் ரத்த தானம் வழங்க உள்ளனர். இம்முகாமில் சேகரிக்கப்படும் ரத்தம், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் ரத்த வங்கிக்கு அளிக்கப்படும்.
மேலும், இந்த விழாவையொட்டி கண் தான உறுதிமொழி ஊக்குவிப்பு முகாமும் நடத்தப்பட உள்ளது. இதில் கட்சியின் 200 தொண்டர்கள் தங்களது கண்களைத் தானம் அளிப்பதற்கான உறுதிமொழியை பதிவு செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கல் ராஜ்நாத் சிங், எம். வெங்கய்ய நாயுடு, ஹர்ஷ வர்தன் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இம்முகாமில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியின்படி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தவும், தீனதயாள் உபாத்யாயின் கனவுகளை நனவாக்க மாநகராட்சிகள் தொடர்புடைய பணிகளில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.