பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 43 ஆண்டுகளாக அடைபட்டுள்ள இந்திய போர்க் கைதிகளின் தற்போதைய நிலை குறித்தும், அவர்களை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் 6 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1971ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவ வீரர்கள் சிலர் போர்க் கைதிகளாக பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடந்த 1985ஆம் ஆண்டு மத்திய அரசு தயாரித்த பட்டியல்படி, இந்திய ராணுவ வீரர்கள் 54 பேர் போர்க் கைதிகளாக பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு 29 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்த போர்க் கைதிகள் பட்டியலில் 54 பேர் இடம்பெற்றுள்ளனர். தற்போது அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம்.
ஆகவே இந்த விவகாரத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக, இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறியபோது, "இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு போர்க் கைதியும் பாகிஸ்தான் சிறைகளில் இல்லை' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.