2ஜி:  ரூ.200 கோடி பேரத்தில் ஆ.ராசா, கனிமொழிக்கு பங்கு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் திமுக ஆதரவு
Published on
Updated on
2 min read

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் திமுக ஆதரவு கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்ட ரூ.200 கோடி பேரத்தில் மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோருக்கு பங்கு உண்டு என்று சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

 இது தொடர்பாக தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், 9 நிறுவனங்கள் மீதும் மத்திய அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான வாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையையொட்டி சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றின் சார்பில் சிறப்பு வழக்குரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆனந்த் குரோவர் ஆஜராகினார்.

குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் நீதிபதியிடம் விளக்கி முன்வைத்த வாதம்:

2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றதற்கு பிரதிபலனாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமான பணத்தை முறைகேடான வகையில் பணப் பரிவர்த்தனை செய்துள்ளது. ஸ்வான் டெலிகாம் நிறுவனம், தனது தலைமை நிறுவனமான டிபி ரியாலிட்டி மூலம் குசேகன் ரியால்டி லிமிடெட், சினியூக் மீடியா & என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களுக்கும், அவற்றின் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு சுமார் ரூ.200 கோடி அளித்துள்ளது.

குறிப்பாக ஊடகத் துறையில் முன்னனுபவம் இல்லாத கட்டுமான நிறுவனமான டிபி ரியாலிட்டி, கலைஞர் டிவிக்கு சுமார் ரூ.200 கோடியை அளிக்க வேண்டிய அவசியம் என்ன? தந்தை-மகன் இடையிலான சொத்துப் பிரிவினைகூட இக்காலத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், எவ்வித ஆவணம், ரசீது இல்லாமல் முன்பின் அறிமுகம் இல்லாத நிறுவனங்கள் கலைஞர் டிவிக்கு எவ்வாறு நிதி வழங்கின? இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தத் தொடங்கியதும் வாங்கிய தொகையை கடனாகக் கணக்கு காட்டி,  அதை நியாயப்படுத்த சில ஆதாரங்களை ஜோடித்துள்ளனர். இவை அனைத்தும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்படி குற்றமாகும்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஆ.ராசா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த போதே, குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற நபர்களான ஷாஹித் உஸ்மான் பால்வா, கெüதம் தோஷி, ராஜீவ் அகர்வால் ஆகியோருடன் தொடர்பில  இருந்துள்ளதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதவிர கலைஞர் டிவியில் 60 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு வயோதிகம், உடல் நலக்குறைவு காரணமாக வழக்கில் இருந்து விடுவிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரங்கள் நடைபெற்றபோது அதன் விவரங்களை திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு தமிழில் அமிர்தம் மொழியாக்கம் செய்துள்ளார்.

மேலும், கலைஞர் டிவி இயக்குநர்கள் கூட்டத்திலும் தயாளு அம்மாள் பங்கேற்றுள்ளார். இயக்குநர் பதவியில் இருந்து கனிமொழி விலகினாலும், அவருக்கு தொடர்ந்து 20 சதவீத பங்குகள் இருந்தன. சில இயக்குநர்கள் குழுக் கூட்டங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில், ரூ.200 கோடி அளவுக்கு நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம், சரத் குமார் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது' என்று ஆனந்த் குரோவர் வாதிட்டார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஓ.பி. சைனி, அமலாக்கத் துறை தரப்பின் வாதத்தை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தொடர அனுமதி அளித்தார்.

ஆ.ராசா, கனிமொழிக்கு அவகாசம்: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட கூடுதல் சாட்சிகளை ஆஜர்படுத்த அனுமதி கேட்டு சிபிஐ தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பரிசீலித்தார்.

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி சைனி வரும் அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.