Enable Javscript for better performance
கூடங்குளம்: வன்முறை வழக்குகள் வாபஸ் இல்லை- Dinamani

சுடச்சுட

    

    "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறை வழக்குளை வாபஸ் பெற முடியாது; சிறிய அளவிலான பிற வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தமிழக அரசு பதிவு செய்த வழக்குகள் தொடர்பாக "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் சார்பில் ஜி. சுந்தர்ராஜன் தாக்கல் செய்திருந்த மனு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்தும், எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

     அதன்படி, நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி. கருணாகரன் சார்பில் தமிழக அரசின் வழக்குரைஞர் பி. பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

     "கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 200 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும் அதைக் கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத் தொகையில் ரூ. 40 கோடி மதிப்பிலான திட்டத்தை மாவட்ட அளவிலான குழு மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 200 சூரிய விளக்குகள், 32 சூரிய மோட்டார் பம்புகள், கூடங்குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துதல், செட்டிக்குளத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், 29 சாலைகள் விரிவாக்கம், ரூ. 150 கோடி மதிப்பில் 5,000 வீடுகள் கட்டும் திட்டம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

     மாநில அரசு அதிகாரிகள், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அவசரகால பயிற்சி அளிக்க 2011 ஆகஸ்ட், 2012 ஜுன் ஆகிய காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

     கூடங்குளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதி நீடிப்பதை உறுதிப்படுத்த அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது பதிவான 248 வழக்குகள் வன்முறை சாராதவையாக கண்டறியப்பட்டுள்ளன. வள்ளியூர் நீதிமன்றத்தில் அவ் வழக்குகள் விசாரிக்கப்படுவதால் அவற்றைத் திரும்பப் பெறும் நடவடிக்கை, நீதிமன்ற விசாரணைக்கு பாதகம் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     அதே சமயம், கடல் வழியாக அணு உலையை முற்றுகையிட முயன்றதாக ஆறு வழக்குகள், தனி நபர்கள் மீதான 40 வழக்குகள், அரசு அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டதாக 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் தன்மை மிகவும் தீவிரம் வாய்ந்தவை. இந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிர்காலத்தில் தார்மிக அச்சம் இல்லாத நிலை உருவாகும்.

     இதனால், சாதாரண மக்களும் அரசு அலுவலர்களும் பாதிக்கப்படுவர். பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், அரசு அதிகாரிகளைத் தாக்கியது போன்ற குற்றங்கள் மிகவும் கடுமையானவை. சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவை. கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இடிந்தகரை பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர். ஆகவே, இதுபோன்ற வழக்குகளைத் திரும்பப் பெற முடியாது.

     அணு உலை செயல்படத் தொடங்கும் முன்பு, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், தேசிய அனல் மின் கழகம், மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த ஆண்டில் ஜூலை 3,4,8,10 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தப்பட்டு அணு உலை ஜூலை 13 முதல் செயல்பாட்டுக்கு வந்தது' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai