Enable Javscript for better performance
சாதனையாளர்களை இனம் கண்டு கௌரவப்படுத்துங்கள்- Dinamani

சுடச்சுட

    

    சாதனையாளர்களை இனம் கண்டு கௌரவப்படுத்துங்கள்

    By புது தில்லி,  |   Published on : 01st April 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "சாதனையாளர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களை இனம் கண்டு கௌரவப்படுத்த வேண்டும்' என்று தமிழ் அமைப்புகளை நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.

    "பத்மபூஷண்' விருது பெற்ற கமல்ஹாசன், வைரமுத்து, கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், பத்மஸ்ரீ விருதுபெற்ற பேராசிரியர் ஆர்.ராமசுவாமி ஐயர், தமிழக அரசு விருது பெற்ற பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஆகியோருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கமல்ஹாசன் ஆற்றிய ஏற்புரை:

    "நான் கற்ற தமிழும் கலையும் எனக்கு தானமாக வழங்கப்பட்டவை. எனது ஆசிரியர்கள் எனக்கு இலவசமாக கற்றுக் கொடுத்ததுபோல, இன்னும் கற்றுக்கொள்ள சினிமா துறையில் காசு கொடுத்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களை நினைவில் கொள்ள வேண்டியது எங்களின் கடமை.

    தண்ணீரின் அவசியத்தை அறிஞர் ராமசுவாமி வலியுறுத்தி உள்ளார். ஆனால், அந்த தண்ணீர் என்பது காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிக்கு மூடும் கடைகளில் கிடைக்கும் விஷயம் அல்ல. உலகில் மட்டுமல்ல, உடம்பிலும் பெரும் பகுதி கலந்திருப்பது தண்ணீர். நானும் நீர்தான். நீரும் நீர்தான்.

    ஆகவே, நானும் இனி தண்ணீரை பக்கெட்டில் சேமித்து பயன்படுத்த முடிவு செய்துவிட்டேன். எனது சுயநலம் அவ்வளவுதான் என்னை அனுமதிக்கிறது. நம் உயிர் ஆதாரம் தண்ணீர் என்பது தெரியாமல் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதைக் கூறுவதற்கு அறிஞர்கள் தேவை.

     இந்த "பத்மபூஷண்', "பத்மஸ்ரீ' விருதுகள் எல்லாம் கிடைக்கும் தகுதியோடு, என்னைவிடத் திறமைவாய்ந்தவர்கள் சினிமா துறை மட்டுமின்றி பல துறைகளில் உள்ளனர். இத்தகைய விருது கிடைக்காவிட்டாலும், அதற்கான வேலைகளைச் செய்து கொள்ளும் சாதனையாளர்கள் பலர் இன்னும் தங்கள் பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் இனம் கண்டு கெüரவப்படுத்த வேண்டும். அரசுக்கு சில வரையறை இருக்கிறது. ஆனால், உங்களுக்கு (தமிழ் அமைப்புகள்) அது கிடையாது. நல்ல தமிழனை காணும்போதெல்லாம் நாவாற வாழ்த்துங்கள், கையாற வணங்கிடுங்கள். நேர்மையான தமிழனைப் பார்க்கும்போது சிரம் தாழ்ந்து வணங்கிவிடுங்கள். ஏனென்றால், அந்த ஜனத்தொகை குறைந்து வருகிறது.

    "பத்மபூஷண்' விருது வாங்கும் இடத்தில் இந்தியாவின் தலைசிறந்த நபர்கள் எல்லாம் இருந்தனர். தேசிய கீதம் இசைத்தது. அந்த உணர்வுக்காகவே வாழ்நாள்தோறும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது. எனக்கு பக்தி கிடையாது; ஆனால், கடமை உண்டு. அக் கடமையை நினைவுகூரும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.

    நேரம் கிடைக்கும்போது, தேசிய கீதத்தைக் கேளுங்கள். அது வேறு மொழிதான். நாம் பேசாத மொழிதான். ஆனால், அதைக் கேட்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சிதான் நம் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அந்த உணர்வுடன் வாழ்வோம்' என்றார் கமல்ஹாசன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai