Enable Javscript for better performance
ராகுல், மோடியை தோற்கடிப்பது அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    "நாட்டில் நேர்மையான அரசியல் மலர வேண்டுமென்றால் ராகுல் காந்தி, நரேந்திர மோடி ஆகிய இருவரையும் தோற்கடிப்பது அவசியம்' என்று ஆம்ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

    தில்லி துவாரகாவில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆம்ஆத்மி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் மேற்கு தில்லி வேட்பாளர் ஜர்னைல் சிங்கை ஆதரித்து கேஜரிவால் பேசியது:

    தில்லியில் 49 நாள்களே ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மி அரசில் ஊழல் பெருமளவு குறைந்தது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு கட்சி ராஜிநாமா செய்ததற்காக மக்கள் துயரமடைந்தது இப்போதுதான். ஆனால், மத்தியில் ஆட்சியைவிட்டு விலகுமாறு மக்கள் கோரியும், பிரதமர் மன்மோகன் சிங் விலகவில்லை.

    காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்ததற்காகவே ஆம்ஆத்மி கட்சி ராஜிநாமா செய்தது. மீண்டும் தில்லி சட்டப்பேரவைக்கு மறுதேர்தல் நடைபெற்றால் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம். ஆனால், மறுதேர்தல் நடத்தவிடாமல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தடுத்து வருகின்றன. இது குறித்து துணைநிலை ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

     "ஆட்சி நடத்துவது என்பது சிறுபிள்ளைகளின் விளையாட்டு அல்ல' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அதை அவரது மகன் ராகுல் காந்திக்கு சொல்லியிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இரு கட்சிகளும் உதவி வருகின்றன. நாட்டில் நேர்மையான அரசியல் மலர வேண்டுமானால், வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை மக்கள் அவசியம் தோற்கடிக்க வேண்டும் என்றார் கேஜரிவால்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai