Enable Javscript for better performance
விஐபி தொகுதி புது தில்−யில் \\\"மகுடம்\\\' யாருக்கு?- Dinamani

சுடச்சுட

  

  விஐபி தொகுதி புது தில்−யில் "மகுடம்' யாருக்கு?

  By புது தில்லி,  |   Published on : 01st April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலைநகரில் முக்கிய அரசு அலுவலகங்கள், முக்கியப் பிரமுகர்களின் இல்லங்கள் அமைந்துள்ள புது தில்லி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றி "மகுடம்' யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடையே மேலோங்கியுள்ளது.

  தில்லியில் மக்களவைக்கான தேர்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால்,  தலைநகரில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதில் வி.ஐ.பி தொகுதியாக புது தில்லி திகழ்கிறது.

  நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம், அனைத்து அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

  புது தில்லி மக்களவைத் தொகுதியில், கரோல் பாக், படேல் நகர், மோதி நகர், தில்லி கன்டோன்மென்ட், ராஜேந்தர் நகர், புது தில்லி, கஸ்தூர்பா நகர், மாளவியா நகர், ஆர்.கே. புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

  இத் தொகுதியில் பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, கல்வி, சாலை வசதி,  சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் பேசப்படுகின்றன. இத் தொகுதி தேர்தல் களத்தில் காங்கிரஸ் சார்பில் அஜய் மாக்கன், பாஜக சார்பில் மீனாட்சி லேகி, ஆம்ஆத்மி சார்பில் ஆசிஷ் கேத்தன், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிஸ்வஜீத் சாட்டர்ஜி ஆகியோர் உள்ளனர்.

  கடந்துவந்த பாதை...: முதல் முதலாக 1952-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிஷன் மஸ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த சுசேதா கிருபளானி வெற்றி பெற்றார். அவரே  தொடர்ந்து 1957-இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். 1961 தேர்தலில் பாரதிய ஜன சங்க கட்சியின் பல்ராஜ் மதோக் வெற்றி பெற்றார். மேலும், இத் தொகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, கிருஷ்ண சந்திர பந்த், ராஜேஷ் கன்னா உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

  கடந்த 2009 தேர்தலில் அஜய் மாக்கன் 4,55,867 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 1.85 லட்சம். அவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் விஜய் கோயல் 2,68,058 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திரிலோக்சந்த் சர்மா 22,364 வாக்குகளும் பெற்றனர். மற்றவர்கள் 2,000 வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றனர்.

  1952-இல் இருந்து கடந்த 2009 வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ், 6 முறை பாஜக, இரு முறை பாரதிய ஜன சங், தவிர வேறு சில கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் அஜய் மாக்கன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம் முறையும் அவரையே காங்கிரஸ் களத்தில் இறக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவருமான அஜய் மாக்கன் "ஹாட்ரிக்' அடிப்பாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  2013-இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு தந்த அதிர்ச்சியை இன்னும் அக் கட்சி மறந்துவிடவில்லை. 70 தொகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற முடிந்தது. மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலிடம் தோல்வியைத் தழுவினார். மேலும், மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7-இல் ஆம்ஆத்மியும் 3-இல் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.  இது குறித்து அஜய் மாக்கன் கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

  ஆகவே, கடந்த டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸýக்கு எதிராகக் காணப்பட்ட அலை, தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இருக்காது' என்றார். இத் தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கூறுகையில், "நான் புது தில்லி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டாலும், தில்லிக்கு புதியவரல்ல' என்றார்.

  பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ள ஆசிஷ் கேத்தன் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிடுகிறார். அவர் கூறுகையில், "தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்குக் கிடைத்த ஆதரவு மக்களளைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். அது எனது வெற்றியை உறுதிப்படுத்தும்' என்றார்.

  இதேபோல, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிஸ்வஜீத் சாட்டர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நடிகராக மிளிரத் தொடங்கி புலனாய்வு செய்தியாளராக உருவெடுத்தவர்.

  இத் தொகுதியில் களத்தில் பிற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேர் இருந்தாலும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி "மகுடம்' யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ஆம் தேதிதான் தெரியும்.

  படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai