"வீடற்ற வாக்காளர்கள் 8,000 ஆக உயர்வு
By 'புது தில்லி, | Published on : 01st April 2014 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லியில் வீடற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் எட்டாயிரத்தை தாண்டியுள்ளதாகவும், அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தில்லி பிரதேச தேர்தல் ஆணையம் கூறியது.
இது தொடர்பாக தில்லி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நீரஜ் பார்தி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
"தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வீடற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 7,000 ஆக இருந்தது. அதன்பின் மார்ச் 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட வாக்காளர் சேர்க்கை முகாம் மூலம் கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடற்ற வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடற்றோர் தில்லியில் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை கண்டறிவது எளிதான காரியம் இல்லை. எனவே, இப் பணிகளுக்கு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அடையாளம் காணும் பணியை மேற்கொண்டோம். வாக்காளர்களிடம் சொந்த ஊர், தாற்காலிக முகவரி உள்ளிட்டவற்றை அவர்கள் சேகரித்தனர்.
மற்ற வாக்காளர்களை போல் முதல்முறையாக வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. தாற்காலிக முகவரி வழங்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் இரவு கூடாரங்களில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள பிரபலமான இடம் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அடையாளங்களாக வாக்காளர் அட்டையில் குறிப்பிட்டுள்ளோம். இப்போது விடுபட்டவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு பின்னரே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர்' என்றார் நீரஜ் பாரதி.