Enable Javscript for better performance
ஆம்ஆத்மி வேட்பாளர் அவதூறுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    அமேதி தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் வெளியிட்ட அவதூறு கருத்துக்கு, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் பாஜக சார்பில் அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஸ்மிருதி இரானி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந் நிலையில், ஸ்மிருதி இரானியை விமர்சிக்கும் வகையில் அமேதி தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஸ்வாஸ், "இரானியோ பாகிஸ்தானியோ, இந்த தொகுதியில் ஆம்ஆத்மியின் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அமேதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று ஏற்கெனவே முடிவாகிவிட்டது' என்று தெரிவித்திருந்தார்.

    இந் நிலையில், குமார் விஸ்வாஸின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தில்லியில் செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    "பெண்களை இழிவுபடுத்துவது ஆம்ஆத்மி கட்சியினருக்கு புதிதல்ல. அக் கட்சியினரிடம் இவ்வளவு மரியாதையைத்தான் எதிர்பார்க்க முடியும்.

    குமார் விஸ்வாஸின் முந்தைய நிகழ்வுகளை அலசினால் பெண்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட தரக் குறைவான கருத்துகள் தெரியவரும்.

    என் பெயரை குறிப்பிட்டுச் சொல்லும்போது, இரானியோ, பாகிஸ்தானியோ என்று விமர்சித்துள்ளார். அது அவருடைய அறிவின் தரத்தை எடுத்துக் காட்டுகிறது. மேலும், பிரசாரத்தின்போது அவர், தொகுதி மேம்பாடு, முன்னேற்றம் குறித்துப் பேசுவாரா என்பது  எனக்குத் தெரியவில்லை. அமேதி தொகுதியில் என்னைப் பொருத்தவரை காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

    காங்கிரஸூக்கும் ஆம்ஆத்மிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பது மக்களுக்குத் தெரியும். குறிப்பாக, தில்லியில் அரசு அமைக்க ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் உதவியபோதே அந்த ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது' என்றார் ஸ்மிருதி இரானி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai