Enable Javscript for better performance
காஜியாபாதில் நாளை நரேந்திர மோடி பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெறவுள்ள பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

    தேசியத் தலைநகர் வலயப் பகுதியின் கீழ் வரும் காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங் போட்டியிடுகிறார். 

    இவரை எதிர்த்து ராஜ் பப்பர் (காங்கிரஸ்), ஷாஸியா இல்மி (ஆம்ஆத்மி), முகுல் உபாத்யாய (பகுஜன் சமாஜ்), சுதன் ராவத் (சமாஜ்வாதி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் போட்டியைச் சமாளிக்கும் வகையில், நரேந்திர மோடியை காஜியாபாதில் பிரசாரம் மேற்கொள்ளச் செய்ய பாஜ முடிவு செய்துள்ளது. இது அத் தொகுதியில் போட்டியிடும் அக் கட்சியின் வேட்பாளர் வி.கே. சிங்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கட்சி மேலிடம் நம்புகிறது.

    இதைத் தொடர்ந்து, காஜியாபாத் மக்களவைத் தொகுதி, இந்திராபுரத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி மிகப்பெரிய பிரசாரக் பொதுக்கூட்டத்திற்கு பாஜக தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து காஜியாபாத் பகுதி பாஜக தலைவர் விஜய் மோகன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "காஜியாபாதின் இந்திராபுரம் பகுதியில் உள்ள சிப்ரா மைதானத்தில் மிகப்பெரிய அளவில் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

    இதற்கான அனுமதி கோரி உள்ளூர் நிர்வாகத்திடம் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்திராபுரம் பகுதி தில்லி, நொய்டாவுக்கு அருகே வருவதால் பாஜக ஆதரவாளர்கள் இந்த இரு பகுதிகளில் இருந்தும் அதிகமாக கூட்டத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இப் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் வர உள்ளார். இந்திராபுரம் பகுதியில் ஏராளமான உயர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருப்பதால் ஹெலிகாப்டர் இறங்கும் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai