Enable Javscript for better performance
கிழக்கு தில்லியில் \\\"ஹாட்ரிக்\\\' அடிக்குமா காங்கிரஸ்?- Dinamani

சுடச்சுட

  

  தலைநகரில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற மக்களவைத் தொகுதியான கிழக்கு தில்லியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ள சந்தீப் தீட்சித் "ஹாட்ரிக்' வெற்றியை ருசிப்பாரா என்பதே அரசியல் பார்வையாளர்களிடையே மேலோங்கியுள்ள கேள்வி.

  தில்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கிழக்கு தில்லி தொகுதி முக்கியத்துவம் பெற்றதாக  மாறியுள்ளது. இங்கு கட்சிகள் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வரக்கூடியவர்களாக உள்ளதே இதற்குக் காரணம்.

  காங்கிரஸ் சார்பில் தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் மூன்றாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் சமூக ஆர்வலரான மகேஷ் கிரி, ஆம்ஆத்மி கட்சி சார்பில் மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

  இத் தொகுதியில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து குடி பெயர்ந்தவர்கள். முஸ்லிம், குஜ்ஜார், ஜாட் இனத்தவர்கள் கணிசமான அளவு உள்ளனர். 2013-ஆம் ஆண்டு நிலவரப்படி இங்கு 17,20,241 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.

  இத் தொகுதியில் ஓக்லா, திரிலோக்புரி, கோன்ட்லி, பட்பர்கஞ்ச், லக்ஷ்மி நகர், விஸ்வாஸ் நகர், கிருஷ்ணா நகர், காந்தி நகர், ஷாதரா, ஜங்புரா ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

  கடந்த 2013-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதிதாகத களம் கண்ட ஆம்ஆத்மி, கிழக்கு தில்லியில் உள்ள 10 தொகுதிகளில் ஐந்தைக் கைப்பற்றின. பாஜக 3,  காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றன. இதே நிலை மக்களவைத் தேர்தலிலும் தொடருமா என்பதே அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ள முக்கியக் கேள்வியாகும்.

  1966-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது கிழக்கு தில்லி மக்களவை தொகுதி உருவானது. அதன்பின் 1967 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 6, பாஜக 5 முறைகள் வெற்றி பெற்றுள்ளன.

  கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சந்தீப் தீட்சித் 5,18,001 வாக்குகள் (60.41%) பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் சேத்தன் சர்மா 2,76,948 வாக்குகள் (32.30%), பகுஜன் சமாஜ் வேட்பாளர் முகமத் யூனஸ் 45,447 வாக்குகள் பெற்றார்.

  இதில் சந்தீப் தீட்சித் சுமார் 2,41,053 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம் முறை காங்கிரஸூக்கு ஆம்ஆத்மியும் பாஜகவும் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இத் தொகுதியில், குடிநீர், மின்சாரம், சுகாதார பிரச்னைகள் அதிகம் உள்ளதாகப் பேசப்படுகிறது. குற்றங்களும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  சந்தீப் தீட்சித் (காங்கிரஸ்): இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சந்தீப் தீட்சித் ஏற்கெனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இம் முறையும் அவரையே அக் கட்சி களத்தில் இறக்கியுள்ளது.

  மத்திய, தில்லி அரசு அறிவித்த திட்டங்களில் முக்கியமாவை நிறைவேற்றப்பட்டு மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளதாகவும் ஷீலா தீட்சித்தின் மகன் என்ற அடையாளமும் "கை' கொடுக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. அதேசமயம், தில்லியில் இதுவரை அக் கட்சிக்கு பாஜக மட்டுமே போட்டியாக இருந்துவந்த நிலையில், புதிதாக உருவாகியுள்ள ஆம்ஆத்மியின் கடும் போட்டியையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  மகேஷ் கிரி (பாஜக): ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பின் அறக்கட்டளையின் சர்வதேச முன்னாள் இயக்குநராகவும் ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தவர்.

  இப்போது இவர் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். சமூக சேவகராக அறியப்படும் இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு யமுனா நதிக்கரையை தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பங்கெடுத்தது, நவபாரத் சேவா சமிதி என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். ஊழலுக்கு எதிரான அமைப்பில் இணைந்தது போன்றவை தனக்கு மக்களின் செல்வாக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இருப்பினும், முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து காங்கிரஸூம் ஆம்ஆத்மியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது பாஜகவுக்கு சவாலாக உள்ளது.

  ராஜ்மோகன் காந்தி (ஆம்ஆத்மி): மகாத்மா காந்தியின் பேரன் என்ற அடையாளத்துடன் களம் இறக்கப்பட்டுள்ள இவர், ஏற்கெனவே, 1989-ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். அதன்பின் 1990-92 காலகட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அண்மையில் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்.

  சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெற்ற எழுச்சி அலை இப்போதும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

  தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 28 தொகுதிகளை கைப்பற்றி அனைத்துக் கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய  ஆம்ஆத்மி, 49 நாள்களிலேயே ஆட்சியிலிருந்து விலகியது. இது அக் கட்சி மீது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ராஜ்மோகன் காந்திக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

   

  பாபுலால் (70), ஹோட்டல் உரிமையாளர், மயூர்விஹார்:

  கடந்த 50 ஆண்டுகளாக இப் பகுதியில் வசித்து வருகிறேன். தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வருபவர்கள் அதன்பின் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. இதனால், தொகுதி வளர்ச்சி மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே,மத்தியில் மாற்றம் வர வேண்டும்.

   

  குப்புசாமி (58), மாநகராட்சி ஊழியர், திரிலோக்புரி:

  சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றபின் கொஞ்ச நாள்களே ஆட்சி செய்தாலும், ஆம்ஆத்மியின் செயல்பாடு நன்றாக இருந்தது. இருப்பினும், அக்கட்சி பாதியிலே ஆட்சியை ராஜிநாமா செய்தது மிகவும் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

   

  ஆர்.கே.மூர்த்தி (71), வியாபாரி, மயூர் விஹார் ஃபேஸ்-1:

  சிறிது காலமாக காங்கிரஸ் அரசு கண்மூடித்தனமாக செயல்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் உள்ளது. மத்தியில் நிச்சயம் மாற்றம் வந்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.

   

  மங்கள் மாண்டிட் (43), வியாபாரி, திரிலோக்புரி:

  அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. கிழக்கு தில்லியிலும் காங்கிரஸ் அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தொகுதி வளர்ச்சி பெறவில்லை.

   

  வி.ராஜு (54), வியாபாரி, ஜன்புரா:

  ஆம்ஆத்மியின் கொள்கைகள் நன்றாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இங்குள்ள மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் அக்கறை காட்டவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai