Enable Javscript for better performance
சாந்தினி சௌக் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் கேஜரிவால் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    சாந்தினி சௌக் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் கேஜரிவால் பிரசாரம்

    Published on : 02nd April 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் ஆசுதோஷை ஆதரித்து கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திறந்தவெளி ஜீப்பில் இருந்தவாறு பிரசாரம் செய்தார்.

    தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 தினங்களே உள்ளதால் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவற்றின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கெனவே பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைநகரில் முதலாவது கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர்.

    இந் நிலையில், வெளிமாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்த ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தில்லியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி ஜீப்பில் வீதிவீதியாக பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

    சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆசுதோஷை ஆதரித்து அவர் வாக்குசேகரத்தில் ஈடுபட்டார். சாந்தினி சௌக் தொகுதி சாம்ராட் திரையரங்கம் அருகே உள்ள பிரிட்டானியா சௌக் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அவருடன் வேட்பாளர் ஆசுதோஷும் ஜீப்பில் உடன் சென்றார்.ஜீப்பின் பின்னால் பல கார்கள் உடன் வந்தன. இதனால், பிரசாரம் மேற்கொண்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தில்லியில் ஆம்ஆத்மி ஆட்சியின்போது மின்சாரம், குடிநீர் ஆகியவற்றுக்கு அறிவித்த மானியம் நின்று போனதற்கு பாஜகவும் காங்கிரஸýம்தான் காரணம் என்றும் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

    இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், பாஜக சார்பில் அக் கட்சியின் பிரதேச தலைவர் ஹர்ஷ் வர்தன் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai