Enable Javscript for better performance
மெட்ரோ ரயில்களில் பிரசார விளம்பரம்: முந்தியது பாஜக!- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயில் பெட்டிகளின் உள்பகுதியில் தேர்தல் பிரசார விளம்பர போஸ்டர்களை இடம்பெறச் செய்து புதுவிதமான பிரசார முறையை பாஜக கையாண்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற மாற்றுக் கட்சிகளைவிட பாஜக முந்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தில்லியின் தேர்தல் பிரசார களம் சூடிபிடித்துள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி மக்களவைக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களைச் சென்றடையும் வகையில் பல நூதன உத்திகளைக் கடைப்பிடித்து முக்கிய அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந் நிலையில், தில்லி மெட்ரோ ரயில்கள், முதல் முறையாக அரசியல் கட்சிகளின் விளம்பரக் களமாக மாறியுள்ளது. பாஜக தேர்தல் பிரசாரம் தொடர்பாக சுமார் 3,400 விளம்பர போஸ்டர்களை மெட்ரோ ரயில் பெட்டிகளில் இடம்பெறச் செய்துள்ளது.

    தில்லி மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில்கொண்டு இந்த விளம்பர போஸ்டர் உத்தியை அக் கட்சி கையாண்டுள்ளது. இதுகுறித்து தில்லி பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சஞ்சய் கௌல் கூறுகையில், "விளம்பரம் மூலம் மக்களைச் சென்றடைய சிறந்த சாதனமாக மெட்ரோ உள்ளது. அனைத்து வயதுப் பிரிவினரும் தில்லி மெட்ரோவில் பயணிக்கின்றனர். சராசரியாக சுமார் 20-45 நிமிடங்கள் வரை பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், ரயில் பெட்டிகளில் வைக்கப்படும் விளம்பர போஸ்டர்களை பயணிகள் கவனம் செலுத்திப் பார்ப்பார்கள்.

    சாலையோரங்களில் வைக்கப்படும் பெரிய விளம்பரப் பலகைகளைவிட இது சிறந்த வகையில் மக்களைச் சென்றடையும். இதனால்தான் பயணிகள் பார்க்கும் வகையில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தொடர்பான 3,400 விளம்பர போஸ்டர்களை மெட்ரோ ரயில் பெட்டிகளில் இடம்பெறச் செய்துள்ளோம்' என்றார். தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) மெட்ரோ ரயில்களில் விளம்பரங்களை ஈஜி கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் மூலம் அயல்பணி முறையில் பெற்றுவருகிறது. இந்த நிறுவனம் விளம்பரங்களை ரயில்களில் இடம்பெறச் செய்வது தொடர்பாக பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளையும் அணுகிவருகிறது.

    இது குறித்து அந் நிறுவனத்தின் இயக்குநர் மனீஷ் சேத்தி கூறுகையில், "மெட்ரோ ரயில்களில் விளம்பர போஸ்டர்கள் இடம்பெறச் செய்வது தொடர்பாக தலைநகரில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் அணுகினோம்.

    பாஜக இந்த வாய்ப்பை முதலாவதாக பயன்படுத்திக் கொண்டது. இந்த நடைமுறையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை. காங்கிரஸ் விளம்பர போஸ்டர்கள் இன்னும் வரவில்லை. ஆனால், இன்னும் ஓரிரு தினங்களில் எங்களை இவ்விஷயம் தொடர்பாக அணுகுவதாக காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai