Enable Javscript for better performance
இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடியவர் மோடி- Dinamani

சுடச்சுட

  

  இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடியவர் மோடி

  By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடியவர் மோடிதான்' என்று மூத்த வழக்குரைஞரும் முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான ராம் ஜேத்மலானி தெரிவித்துள்ளார்.

  எழுத்தாளர் மது பூர்ணிமா கிஷ்வர் எழுதிய "மோடி, முஸ்லிம்கள், மீடியா' என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம் ஜேத்மலானி, புத்தகத்தை வெளியிட்டுப் பேசியதாவது:

  "2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி முதல் முறையாக பதவியேற்ற போது பேசினார். அப்போது அவர் தனது உரையில் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தியும், நாட்டின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகளால் கடல்வழி மார்க்கமாகத்தான் ஆபத்து உள்ளது என்றும் கூறினார். அவற்றைப் பலப்படுத்தவும் வலியுறுத்தினார். அப்போதே நரேந்திர மோடிக்கு பிரதமராகும் அளவுக்கு வாய்ப்புள்ளது என்ற முடிவுக்கு வந்தேன். தற்போதைய அரசியல் சூழலில், மோடிக்கு மட்டுமே பிரதமராகத் தகுதி உள்ளது. மாநில முதல்வராகப் பதவியேற்ற மூன்று நாள்களிலேயே குஜராத் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அதேபோல் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும் திறம்படச் செயல்பட்டார்.

  அதே காலக்கட்டத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. அதில், தன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அதன்பின் வந்த தேர்தல்களில் முஸ்லிம்களின் ஆதரவுடன் மூன்று முறை முதல்வராக மோடியால் வெல்ல முடிந்தது. நீதிபதி சச்சார் குழு வெளியிட்ட அறிக்கையில், மற்ற மாநிலங்களைவிட குஜராத்தில்தான் முஸ்லிம்கள் அதிகம் கல்வியறிவு பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  கோத்ரா ரயில் சம்பவத்தில் மோடியைத் தொடர்புபடுத்திக் குற்றம்சாட்டும் காங்கிரஸ், 1984-ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவில் தாக்குதலுக்குப் பின்னர் சீக்கியர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியது எந்தவகையில் நியாயம்? நம் நாட்டை ஊழல்மயமாக காங்கிரஸ் மாற்றிவிட்டது.

  கருப்புப் பணத்தை மீட்பதிலும் காங்கிரஸ் வெளிப்படையாக செயல்படவில்லை. கருப்பு பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடாமல், அவர்களை காங்கிரஸ் அரசு பாதுகாத்து வருகிறது. அப் பணத்தை மீட்டால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3 லட்சம் கிடைக்கும். இந்தியா வல்லரசாகவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையை உருவாக்கக்கூடியவர் நரேந்திர மோடி மட்டுமே. இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய தகுதியும் அவருக்கு உண்டு' என்றார் ராம் ஜேத் மலானி.

  இந் நிகழ்ச்சியில் குஜராத் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆசிஃபா கான், முஸ்லிம்களுக்கான தேசிய ஒருமைப்பாடு அமைப்பு நிர்வாகி டாக்டர் மிதாட் ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai