Enable Javscript for better performance
கபில் சிபலுக்கு \\\"கை\\\' கொடுக்குமா சாந்தினி செளக்?- Dinamani

சுடச்சுட

  

  கபில் சிபலுக்கு "கை' கொடுக்குமா சாந்தினி செளக்?

  By புது தில்லி  |   Published on : 03rd April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் போட்டியிடும் முக்கிய விஐபி தொகுதியாகப் பார்க்கப்படும் சாந்தினி செüக் காங்கிரஸýக்கு மீண்டும் "கை' கொடுக்குமா என்பதே அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ள கேள்வியாகும்.

  தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் பழமையான சாந்தினி செüக் இம் முறை காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி என மும்முனைப் போட்டியைச் சந்தித்துள்ளது.

  காங்கிரஸ் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு, சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். தில்லி பிரதேச பாஜக தலைவரும், கிருஷ்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான ஹர்ஷ் வர்தன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஊடகவியலாளர் ஆசுதோஷ் ஆம்ஆத்மி சார்பில் களம் கண்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நரேந்திர குமார் பாண்டே மற்றும் எட்டு சுயேச்சைகள் உள்பட மொத்தம் 18 பேர் களத்தில் உள்ளனர்.

  மட்டியா மஹால், பல்லிமரான், சாந்தினி செüக், சதர் பஜார், மாடல் டவுன், வஜீர்பூர், ஆதர்ஷ் நகர், ஷாலிமார் பாக், த்ரி நகர், சகூர் பஸ்தி ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சாந்தினி செüக் மக்களவைத் தொகுதியில் 2013 டிசம்பர நிலவரப்படி மொத்தம் 13,82,847 வாக்காளர்கள் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதில் 7.91 லட்சம் பேர் ஆண்கள், 6.55 லட்சம் பேர் பெண்கள்.

  நாட்டின் முக்கியச் சந்தைகளில் சாந்தினி செüக், சதர் பஜார் உள்ளிட்டவை திகழ்ந்து வருகின்றன. இத் தொகுதியில் வணிக சமூகமான வைசியர்கள் 17 சதவீதம் பேர், பஞ்சாபிகள் 14 சதவீதம், சீக்கியர்கள் 4 சதவீதம், ஜாமா மசூதியைச் சுற்றியுள்ள பகுதி, சாவ்ரி பஜார், பல்லிமரான் உள்ளிட்ட பகுதிகளில் 15 சதவீதம் முஸ்லிம்கள், சகூர் பஸ்தி, வஜீர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் வசித்து வருகின்றனர். இத் தொகுதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் வணிகர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய மூன்று பிரிவினர் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

  வாட் வரி உள்ளிட்ட பல பிரச்னைகளை உள்ளதாக இப் பகுதி வர்த்தகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், வாகன நிறுத்துமிடம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகளும் இத் தொகுதியில் அதிக அளவில் பேசப்படுகிறது.

  கபில் சிபல் (காங்கிரஸ்): கடந்த இரு முறை இத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே, மூன்றாவது முறையாக அவரையே நம்பிக்கையுடன் காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. அண்மையில் தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

  ஆகவே, இம்முறை, சாந்தினி சௌக்கில் பெரும்பான்மையாக உள்ள வணிகர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் வாக்குகளைக் குறிவைத்து கபில் சிபல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தொகுதியில் தான் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். ஆனால், இன்னும் பல பகுதிகள் அடிப்படை வசதிகள் தீர்ப்படாமல் உள்ளது அவருக்கு பாதகமானதாகக் கருதப்படுகிறது.

  ஹர்ஷ் வர்தன் (பாஜக): வணிகர்களின் வாக்குகளை குறிவைத்து வைசிய சமூகத்தைச் சேர்ந்த ஹர்ஷ் வர்தனை பாஜக களம் இறக்கியுள்ளது.

  வசிப்பது கிழக்கு தில்லி என்றாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது சாந்தினி செüக் பகுதியில்தான் எனக் கூறி "உங்கள் தொகுதியைச் சேர்ந்தவன் நான்' என்று உரிமையுடன் அவர் வாக்கு சேகரித்து வருகிறார். நரேந்திர மோடி தலைமையில் நல்ல ஆட்சி நிர்வாகம் தரப்படும்; சாந்தினி செüக், சதர் பஜார் உள்ளிட்ட பகுதிகள் மேம்படுத்தப்படும் ஆகியவை இவரது வாக்குறுதிகளில் முக்கியமானவை. ஆனால், காங்கிரஸýம், ஆம்ஆத்மியும் குறிவைத்துள்ள முஸ்லிம்கள் வாக்குகள் எந்த அளவுக்கு ஹர்ஷ் வர்தனுக்குக் கிடைக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  அசுதோஷ் (ஆம்ஆத்மி): தனியார் தொலைக்காட்சியில் முக்கிப் பொறுப்பிலிருந்து அண்மையில் விலகி ஆம்ஆத்மி சேர்ந்தவர் அசுதோஷ். கேஜரிவால் வெளியிட்ட வி.ஐ.பி. ஊழல்வாதிகள் பட்டியலில் மத்திய அமைச்சர் கபில் சிபலின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக அசுதோஷை ஆம்ஆத்மி களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊழல் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

  கடந்த மக்களவைத் தேர்தலில் சாந்தினி சௌக்கில் மொத்தம் பதிவான 7,80,455 வாக்குகளில் கபில் சிபல் 4,65,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் சுமார் 2 லட்சம் வாக்குகளுக்கும் மேல் இருந்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜயேந்தர் குப்தா 2,65,003 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் முகமது முஸ்தாகீம் 26,486 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர்.

  அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டபேரவை தேர்தலில் சாந்தினி செüக் மக்களவைத்தொகுதிக்கு உள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம்ஆத்மி 4, பாஜக 3, காங்கிரஸ் 2, ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

  2009 மக்களவைத் தேர்தலில் நிலவிய அரசியல், தேர்தல் சூழல் தற்போது தில்லியில் நிலவவில்லை. வழக்கமாக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையேதான் போட்டி இருக்கும். இம்முறை ஆம்ஆத்மியின் பது வரவால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

  இத் தொகுதியில் கபில் சிபல், ஹர்ஷ் வர்தன், அசுதோஷ் என நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மொத்தத்தில் மும்முனைப் போட்டியில் மீண்டும் வெற்றிக் கனியை கபில் சிபல் சுவைப்பாரா என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ஆம் தேதி பதில் கிடைக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai