Enable Javscript for better performance
செல்போன் மூலம் பாஜக தேர்தல் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், லட்சக்கணக்கான செல்போன் உபயோகிப்பாளர்களைக் கவரும் வகையில் "குரல் வழி மூலம் தேர்தல் பிரசாரம்' மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

    தேர்தல் களத்தில் மக்களிடம் பிரசாரம் செய்ய ஒலிபெருக்கி, திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் இதுவரை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது மக்கள் தொடர்பில் இணையதளம். சமூக வலைதளங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆகவே, அரசியல் கட்சிகளின் பார்வை தொழில்நுட்ப ரீதியிலான பிரசார உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளன.

    குறிப்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், பிற மாநிலக் கட்சிகளும் அதிக முனைப்புக் காட்டி வருகின்றன.

    மக்களவைத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்து வருவதால், தொலைபேசி வழியாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்கும் வகையில் செல்போன் உபயோகிப்பாளர்களுக்கான ஒரு புதிய தொழில்நுட்ப பிரசார உத்தியை பாஜக வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.

    இது குறித்து அக் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அமைப்பாளர் அர்விந்த் குப்தா புதன்கிழமை கூறியதாவது: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெளியிடும் பிரசார செய்தியை செல்போன் உபயோகிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்தால், கேட்கும் வகையில் புதிய தொழில்நுட்ப பிரசார வசதி வரும் வெள்ளிக்கிழமை முதல் செயல்படுத்தப்படும். இதற்காக "022-45014501' எனும் பிரத்யேக தொலைபேசி எண் வசதி அறிமுகப்படுத்தப்படும். இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்கலாம்.

    அதேபோல ஊழல், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு தொடர்பாக நரேந்திர மோடியின் சிந்தனைகளை செல்போனில் அழைப்போர் கேட்கும் வசதியும் புதிய தொலைபேசி சேவை மூலம் வழங்கப்படும்' என்றார் அர்விந்தர் குப்தா. ஏற்கெனவே இணையதளம் மூலம் ஏராளமான பார்வையாளர்களை பாஜக சென்றடைந்துள்ளது.

    தற்போது செல்போன் வழியாக மக்களிடம் பேசும் திட்டமும் சிறந்த வரவேற்பைப் பெறும் என பாஜக நம்புகிறது. அண்மையில் நாடு முழுவதும் உள்ள பல தேநீர் கடைகளில் இணையதளம் மூலம் "ஹைடெக் டீ' பிரசாரத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.

    அதேபோல, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களை பாஜக பயன்படுத்தி வாக்காளர்களிடைய பிரசாரம் செய்து வருகிறது. தில்லி மெட்ரோ ரயில் பயணிகளைக் கவரும் வகையில் பாஜக மெட்ரோ ரயில்களில் தேர்தல் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai