Enable Javscript for better performance
தில்லிவாசிகளுக்கு கேஜரிவால் துரோகம்- Dinamani

சுடச்சுட

    

    இலவசக் குடிநீர், மின் கட்டண மானியம் உள்ளிட்ட விவகாரத்தில் தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கடுமையாகச் சாடியுள்ளன.

    சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2014-15-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இலவசக் குடிநீர், மின் கட்டண மானியம் ஆகியவற்றுக்கு மார்ச் 31 வரை மட்டுமே குறிப்பிட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    இதனால், ஏப்ரல் 1 முதல் இந்த மானிய சலுகையும், இலவசக் குடிநீர் சலுகையும் தில்லிவாசிகளுக்கு கிடைக்காமல் போனது. இதற்கு ஆம்ஆத்மியும், அப்போது முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவாலும்தான் காரணம் என்று காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

    காங்கிரஸ்: இது குறித்து, காங்கிரஸ் பிரதேச தலைவர் அர்விந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில், "மின்கட்டண மானிய சலுகையும்,700 லிட்டர இலவசக் குடிநீரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

    இதற்கு முழுப் பொறுப்பு ஆம்ஆத்மி அரசில் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால்தான் காரணம். இதன் மூலம் தேர்தலில் தில்லிவாசிகளுக்கு கேஜரிவால் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மின்கட்டண மானியம், இலவசக் குடிநீர் சலுகை ஆகியவற்றை அறிவித்து கேஜரிவால் நாடகமாடியுள்ளார். ராஜிநாமா செய்வது என்ற நோக்கத்தில் ஆட்சியை நடத்திய கேஜரிவால், இலவச மின்சாரம், மின்கட்டண சலுகைக்கு பட்ஜெட்டில் ஏன் டிசம்பர் வரை ஒப்புதல் பெறவில்லை. எனவே, தில்லிவாசிகள் அவரை மன்னிக்கவே மாட்டார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

    தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறுகையில், "கேஜரிவாலின் நடவடிக்கை தில்லிவாசிகளுக்கு எதிரானது. அவர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளார். மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மானிய சலுகைத் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கேஜரிவாலின் மக்கள் விரோதப் போக்கை எடுத்துக் காட்டுகிறது' என்றார்.

    பாஜக: தில்லி மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா கூறுகையில், "மின் கட்டண மானியம், இலவசக் குடிநீர் ஆகியவை மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்ததற்கு கேஜரிவால்தான் முழுக் காரணம்.

    இந்த நடவடிக்கை தில்லிவாசிகளுக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகமாகும். அவர் தில்லிவாசிகளுக்கு நல்லது செய்ய நினைத்திருந்தால் சலுகைத் திட்டங்களுக்கு சட்டப்பேரவையில் மார்ச் 31 வரை மட்டுமே ஏன் ஒப்புதல் பெற வேண்டும். ஆண்டு முழுவதற்குமே பெற்றிருக்கலாமே? இப்போது கேஜரிவால் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

    இதன் மூலம் அவரது நாடகம் அம்பலமாகியுள்ளது. பட்ஜெட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத போது, இப்போது துணை நிலை ஆளுநர் எப்படி சலுகைத் திட்டத்தைத் தொடர முடியும். எனவே, தில்லிவாசிகளுக்கும் கேஜரிவால் துரோகம் செய்துவிட்டார்.

    இந் நிலையில், மின்கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வால் தவிப்புக்குள்ளாகும் தில்லிவாசிகளைக் காப்பாற்ற, மத்திய அரசு சிறப்புத் திட்டத்தின் கீழ் தில்லி அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai