Enable Javscript for better performance
தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    "தில்லியில் வீடற்றோருக்காக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர இரவுக் குடில்கள் திட்டம் சரியானதுதான்; ஆனால், அதன் அமலாக்கத்தில் முழு ஈடுரபாடு காட்ட வேண்டும்' என்று பிரதேச அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை அறிவுரை வழங்கியது.

    மேலும், வீடற்றோர் குடில்களில் வசிக்கும் போதை பழக்கத்துக்கு அடியானவர்களின் நிலவரம் தொடர்பாக ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படியும் தில்லி போலீஸýக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    "தில்லியில் உள்ள இரவுக் குடில்களில் போதுமான வசதிகள் இல்லை; ஆட்டு மந்தைகள் போல இரவு நேரங்களில் நடைபாதைகளில் படுத்து உறங்குவோரை கொண்டு வந்து போலீஸார் போடுகின்றனர்' என்று சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை வழக்காகக் கருதி விசாரணைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதித்தது.

    அதைத் தொடர்ந்து வீடற்றோருக்காக கட்டப்பட்டுள்ள நிரந்தரக் குடில்கள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும், இந்த விசாரணையில் தில்லி நகர்ப்புற குடில்கள் மேம்பாட்டு வாரியம் உதவ வேண்டும் என்றும் தில்லி அரசை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந் நிலையில், தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் பி.டி. அகமது, நீதிபதி மிருதுள் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரவுக் குடில்கள் தொடர்பாக தில்லி நகர்ப்புற குடில்கள் மேம்பாட்டு வாரியத் தலைமை செயல் அதிகாரி அமர்நாத் தாக்கல் செய்திருந்த அறிக்கையை நீதிபதிகள் படித்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியது:

    "வீடற்றோருக்கு நிரந்தரக் குடில்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அத் திட்டத்தின்படி குறைந்தபட்சம் 50 சதுர அடி கொண்ட குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், குடிநீர், சுகாதாரம், கழிவறை, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் வகுத்த மத்திய அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஆனால், எழுத்து வடிவில் உள்ள இத் திட்டம் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்விக்குரியாக உள்ளது.

    உண்மையில் இப்படியொரு திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பது இதுவரை எங்களுக்குக்கூட தெரியாது. குறிப்பாக, சாலையோரத்தில் படுத்துறங்கும் ஏழை மக்களுக்கு இத் திட்டம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறோம். இத் திட்டத்தை தில்லி நகர்ப்புற குடில்கள் மேம்பாட்டு வாரியம எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பதை விளக்கி ஏப்ரல் 28-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசு மட்டுமின்றி சில அரசு சாரா அமைப்புகளும் நிரந்தர இரவுக் குடில்களை நடத்தி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புகள் எவை? அவற்றின் பின்னணி என்ன? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

    வீடற்றோருக்கான குடில்களில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எனக் கூறி தங்க வைக்கப்படும் சிலரின் கைரேகைகளை தில்லி போலீஸ் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்வதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையா? உண்மையென்றால், அந் நடவடிக்கை எதற்காக செய்யப்படுகிறது? கைதிகள் அடையாள சட்டத்தின்படி அந் நடவடிக்கை சரியானதுதான்? இது தொடர்பான அறிக்கையை தில்லி போலீஸ் வரும் 23-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்' என்று நீதிபதிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai