Enable Javscript for better performance
பொன்முடி, சுரேஷ்ராஜன் மறுஆய்வு மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    பொன்முடி, சுரேஷ்ராஜன் மறுஆய்வு மனு தள்ளுபடி

    By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தங்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கத் தடையில்லை என்று கடந்த பிப்ரவரியில் அளித்த தீர்ப்பை மறுஆய்வுக் செய்யக் கோரி திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சுரேஷ் ராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

    இது தொடர்பான மனுவை நீதிபதிகள் சந்திரமௌலி குமார் பிரசாத், எம்.ஒய். இக்பால் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பரிசீலித்தது. மறுஆய்வு மனு என்பதால் தங்கள் அறையில் வைத்து மனுவை நீதிபதிகள் பரிசீலித்தனர். அப்போது நீதிபதிகள், "ஏற்கெனவே அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று கூறினர். இந்த உத்தரவின் நகல் புதன்கிழமை வெளியானது.

    வழக்கு என்ன? தமிழகத்தில் 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடைபெற்றது. அதில் போக்குவரத்து அமைச்சராக இருந்த பொன்முடியும் சுற்றுலா அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2003-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. அதில் சுரேஷ் ராஜன், அவரது பெற்றோர், சகோதரி, மைத்துனர் பெயர்களில் ரூ.23.77 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதேபோல பொன்முடி அவரது மனைவி, மகன்கள் பெயரில் ரூ.3.08 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில், "இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும்' என பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவை 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

    தமிழகம் முறையீடு: இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. அதில், "தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சுரேஷ் ராஜன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2003-ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு மீண்டும் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது, பொன்முடி, சுரேஷ் ராஜன் மீதான வழக்கில் தொய்வு ஏற்பட்டது. இந் நிலையில், 2011-ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    தீர்ப்பு: அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை வைத்தும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குறிப்பிட்ட தொகைக்கு வருமான வரி செலுத்தி விட்டதாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது சரியல்ல. ஆகவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும்' என்று கடந்த பிப்ரவரியில் கூறியது. இதை மறுஆய்வு செய்யக் கோரி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, சுரேஷ் ராஜன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai